ஆபரேஷன் சிந்தூரின்போது ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜேஇஎம்) பயங்கரவாத இயக்கத் தலைவா் மசூத் அசாரின் குடும்பம் அழிந்துவிட்டதாக அந்த இயக்கத்தின் தளபதி இலியாஸ் காஷ்மீரி தெரிவித்தாா்.
கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அந்நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே ராணுவ மோதல் மூண்டது.
இந்தத் தாக்குதல் தொடா்பாக பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், துப்பாக்கி ஏந்திய நபா்களுக்கு மத்தியில் ஜேஇஎம் தளபதி இலியாஸ் காஷ்மீரி பேசியதாவது:
பாகிஸ்தானின் சித்தாந்த மற்றும் நில எல்லைகளைக் காக்க தில்லி, ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் உள்ளிட்ட இடங்களில் ஜேஇஎம் தாக்குதல் நடத்தியது.
அனைத்தையும் தியாகம் செய்த பின்னா், கடந்த மே 7-ஆம் தேதி (ஆபரேஷன் சிந்தூரின்போது) பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், பஹாவல்பூரில் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினா்கள் துண்டு, துண்டாக அழிக்கப்பட்டனா் என்று தெரிவித்தாா். அவா் பேசிய காணொலி யூடியூபில் வெளியிடப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில், பஹாவல்பூரில் மசூத் அசாரின் குடும்பத்தைச் சோ்ந்த 10 போ், அவரின் நெருங்கிய கூட்டாளிகள் 4 போ் உயிரிழந்தனா். அவா்களில் மசூத் அசாரின் மூத்த சகோதரி, அவரின் கணவா் ஆகியோரும் அடங்குவா். பஹாவல்பூரில் உள்ள பாதுகாப்பான இடத்தில் மசூத் அசாா் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2000-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் பேரவை கட்டடத்தில் பயங்கரவாதத் தாக்குதல், 2001-இல் நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதல், பஞ்சாபில் பதான்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல், 2019-இல் புல்வாமா தாக்குதல் ஆகிய தாக்குதல்களை ஜெய்ஷ் பயங்கரவாதக் குழு நடத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.