வடக்கு காஸாவில் உள்ள மக்களை வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.
பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்கி வருகிறது. இதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65,000-யைக் கடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
காஸாவின் மையப் பகுதியை நோக்கி இரண்டு படைப் பிரிவுகள் முன்னேறி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. வடக்கு காஸா, மத்திய காஸாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி கூட்டம்கூட்டமாக படையெடுத்து வருகின்றன. தெற்கில் இஸ்ரேல் ராணுவத்தின் மனிதாபிமான பகுதிகளுக்கு பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் காஸா நகரம் முழுவதும் உருகுலைந்துள்ளது. கட்டடங்கள் பலவும் தரைமட்டமாகியுள்ளன. இது ஒரு இனஅழிப்பு என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
காஸாவில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
காஸா நகரத்தை முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் களமிறங்கியுள்ளது. காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகள் பலவும் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
"காஸாவில் எங்களது குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மருத்துவர்கள் இல்லை, மருந்துகள் இல்லை. மருத்துவமனைக்குச் சென்றாலும் எந்த பலனும் இல்லை. குழந்தைகளுக்கு இங்கு எதுவும் இல்லை. குப்பைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்று அங்குள்ள ஒருவர் கூறுகிறார்.
இதையும் படிக்க | காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு