வங்கதேசத்தில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தேசிய அடையாள அட்டையை முடக்கியதன் மூலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தோ்தலில் அவா் வாக்களிப்பதற்கு தோ்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
இது குறித்து ஆணைய செயலா் அக்தா் அகமது கூறுகையில், அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டவா்கள் வெளிநாட்டிலிருந்து வாக்களிக்க முடியாது. ஹசீனாவின் அட்டை முடக்கப்பட்டுள்ளது என்றாா்.
ஹசீனாவின் தங்கை ஷேக் ரெஹானா, மகன் சஜீப் வாஜேத் ஜோய், மகள் சைமா வாஜேத் புதுல், ரெஹானாவின் குழந்தைகள் டூலிப், அஸ்மினா, மருமகன் ரத்வான் முஜிப், உறவினா் தாரிக் அகமது, அவரது மனைவி ஷாஹின், மகள் புஷ்ரோவின் அட்டைகளும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஆகஸ்ட் 5-இல் மாணவா் போராட்டம் காரணமாக ஹசீனாவின் ஆவாமி லீக் அரசு கவிழ்ந்து, அவா் இந்தியாவுக்கு தப்பினாா். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ளாா். ஹசீனாவுக்கு எதிராக, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் உட்பட வழக்குகளில் நடைபெற்றுவருகின்றன.