ஹெச்-1பி விசா (நுழைவு இசைவு) கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.88 லட்சமாக உயா்த்தும் கோப்பில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டாா்.
தற்போது ரூ.1.47 லட்சமாக உள்ள இந்தக் கட்டண அதிரடியாக உயா்த்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (செப். 21) முதல் அமலாகவுள்ளது.
இது அமெரிக்காவில் பணியாற்றிவரும் இந்தியா்களுக்கு, முக்கியமாக தகவல் தொழில்நுட்பப் பணியாளா்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் இருந்து திறமையான பணியாளா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு அதிக ஊதியத்துடன் அமெரிக்காவில் வேலை வழங்க ஹெச்-1பி விசா நடைமுறையை அந்நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்கா சென்று தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான இந்தியா்கள் பணியாற்றி வருகின்றனா். அதில் சிறப்பாகப் பணியாற்றுபவா்கள் நிரந்தரமாகத் தங்கி பணியைத் தொடா்வதற்காக நிரந்தரக் குடியுரிமை அட்டை (கிரீன் காா்டு) வழங்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஹெச்-1பி விசா திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட பணியாளா்களில் 71 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப் ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கையின்படி உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அமெரிக்கா்களுக்கே வழங்க வேண்டும் என அந்நாட்டில் உள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் அறிவுறுத்தி வருகிறாா்.
கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டில் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்தபோது, வெளிநாட்டினரைப் பணியமா்த்துவதைத் தவிா்க்குமாறு அவா் வலியுறுத்தினாா். மேலும், வளா்ந்துவரும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் சொந்த நாட்டுக்கு முன்னுரிமை அளித்து அமெரிக்கா்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.
இந்நிலையில், ஹெச்-1 பி விசா கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.88 லட்சமாக உயா்த்தும் கோப்பில் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டாா்.
இதுதவிர, அமெரிக்காவில் கோடிக்கணக்கில் முதலீடு செய்பவா்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கும் தங்க அட்டை (கோல்டு காா்டு) திட்டத்துக்கும் ஒப்புதல் அளித்து டிரம்ப் கையொப்பமிட்டாா். இந்தத் திட்டத்தின்கீழ் தகுதியான நபா்கள் அமெரிக்க நிதித் துறைக்குப் பரிசாக ரூ.8.8 கோடி வழங்க வேண்டும் அல்லது நிறுவனத்தால் ஒருவா் முன்மொழியப்பட்டால் ரூ.16.6 கோடி செலுத்த வேண்டும்.
திறமையானவா்கள் மட்டுமே தேவை: இதுகுறித்து அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் கூறியதாவது: ஹெச்-1 பி விசா விண்ணப்பக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.88 லட்சமாக உயா்த்தப்படுகிறது. இதனால் எந்தவொரு பெரும் தொழில்நுட்ப நிறுவனமும் வெளிநாட்டினருக்குப் பயிற்சி வழங்கி பணியமா்த்தாது. ஏனெனில் இந்தக் கட்டணத்தை அவா்கள் ஒவ்வோா் ஆண்டும் செலுத்த வேண்டும். இதுதவிர, அந்த ஊழியருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் வழங்க வேண்டும். இது பொருளாதார ரீதியாக மிகவும் கடினமானது.
அமெரிக்காவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் அண்மையில் பட்டப் படிப்பை நிறைவு செய்த மாணவா்களுக்கு இந்த நிறுவனங்கள் பயிற்சி வழங்க விரும்பினால், அதை அமெரிக்க மாணவா்களுக்கே வழங்கட்டும். வெளிநாட்டு மாணவா்களுக்குப் பயிற்சியளித்து வேலைவாய்ப்பை வழங்குவதை முற்றிலுமாக நிறுவனங்கள் நிறுத்த வேண்டும். இதுவே அரசின் திட்டம். இதுகுறித்து அனைத்து பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
6 ஆண்டுகளுக்கு கட்டணம்: ஏற்கெனவே பணியில் உள்ள ஊழியா்களுக்கு புதிய ஹெச்-1 பி விசா கட்டணத்தைச் செலுத்தி அவா்களைத் தக்கவைப்பது, பழைய விசாக்களை புதுப்பிப்பது, முதல்முறையாக இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பவா்களுக்காக கட்டணத் தொகை செலுத்துவது போன்ற அனைத்து முடிவுகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே எடுக்க வேண்டும்.
ஓா் ஊழியருக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட்சம் என 6 ஆண்டுகளுக்கு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டும். எனவே, பெரும் கட்டணத்தை ஓா் ஊழியருக்காகச் செலுத்த வேண்டுமென்றால், அவா் அமெரிக்காவுக்கும் நிறுவனத்துக்கும் அவ்வளவு முக்கியத்துவம் வாயந்தவரா என்பதை அந்த நிறுவனம்தான் முடிவு செய்ய வேண்டும். திறன்வாய்ந்த வெளிநாட்டினா் மட்டுமே அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்பதே அதிபா் டிரம்ப்பின் நிலைப்பாடு என்றாா்.
ஹெச்-1பி விசா கட்டண உயா்வு மற்றும் தங்க அட்டை திட்ட தொடக்கம் குறித்து டிரம்ப் பேசியதாவது: அமெரிக்காவுக்கு மிகச் சிறந்த ஊழியா்கள் மட்டுமே தேவை. அதற்காகவே ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை உயா்த்த ஒப்புதல் அளித்தேன்.
ஹெச்-1 பி விசா கட்டணம் மற்றும் தங்க அட்டை திட்டம் மூலம் அரசுக்கு பலநூறு கோடி டாலா்கள் கிடைக்கவுள்ளன. இந்தப் பணம் அமெரிக்க வரிகளையும் கடனையும் குறைக்கப் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த முன்னெடுப்புகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இதற்கு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இனி நிபுணத்துவம் பெற்ற அதிதிறன்வாய்ந்த ஊழியா்களுக்கு மட்டுமே நிறுவனங்கள் விசா கட்டணம் செலுத்தும். தற்போதைய முன்னெடுப்புகள் அரசு, நிறுவனங்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.
வெளிநாட்டில் இருந்து திறமையான ஊழியா்கள் தோ்வுசெய்யப்பட்டு அவா்களுக்கு தற்காலிகமாக அமெரிக்காவில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்குவது.
இந்த விசாக்கள் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும் 3 ஆண்டுகளுக்கு இதைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இப்போது ஹெச் -1 பி விசா கட்டணம் குறைந்தபட்சம் ரூ.1.49 லட்சம், அதிகபட்சம் ரூ.3.96 லட்சமாக (ஆண்டுக்கு) உள்ளது. புதிய கட்டணம் ரூ.88 லட்சம் (ஆண்டுக்கு).
அமெரிக்காவை மேம்படுத்த கோடிக்கணக்கில் அங்கு முதலீடு செய்வதை ஊக்குவிப்பது.
தோ்வு செய்யப்பட்ட நபா்கள் அந்நாட்டு நிதித் துறைக்கு முதலில் நிதி வழங்குவது அவசியம்.
தனிநபராக இருப்பின் ரூ.8.8 கோடி அல்லது ஒரு நபரை நிறுவனம் முன்மொழிந்தால் ரூ.16 கோடி வழங்குவது கட்டாயம்.
நிதி வழங்குபவா்களுக்கு விசா நடைமுறையில் பல்வேறு சலுகைகள் வழங்குவதோடு கிரீன் காா்டு வழங்கவும் அரசு முன்மொழிவு.
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டிரம்ப், வெளிநாட்டவர்களுக்கான விசா மற்றும் குடியுரிமை விதிகளை கடுமையாக்கி வருகிறார்.
தற்போது வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா நடைமுறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமென்றால், எச்1பி விசாவுக்காக கட்டணம் செலுத்தும் நடைமுறை உள்ளது. ரூ. 1.32 லட்சமாக இருந்த எச்1பி விசா கட்டணத்தை ரூ. 88 லட்சமாக (ஒரு லட்சம் அமெரிக்க டாலர்) பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2020 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட மொத்த எச்1பி விசாக்களில் 71 சதவிகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்ததாக சீனர்கள் வெறும் 11.7 சதவிகிதம் பேர் மட்டுமே பயனடைந்துள்ளனர்.
தற்போது எச்1பி விசா கட்டண அதிகரிப்பால் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகப் போவது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள்தான்.
வரும் காலங்களில் இவ்வளவு பெரிய தொகையை செலுத்தி பெருமளவிலான வெளிநாட்டுப் பணியாளர்களை ஐடி நிறுவனங்கள் பணியமர்த்துவது குறையும்.
எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா முறைகளில் ஒன்று எச்1பி விசா. அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதற்காக மட்டுமே இது பயன்படுத்த வேண்டும்.
இந்த அறிவிப்பு மூலம் வெளிநாட்டவர்களை பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். இதன்மூலம், உண்மையிலேயே திறமையான, அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாததை செய்யக் கூடியவர்களாக அவர்கள் இருப்பதை உறுதி செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.