உலகத் தலைவர்களுக்கு ஐ.நா. தலைவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், மனிதநேயமானது இப்போது கடுமையான இடைஞ்சல் மற்றும் சொல்லொணாத் துயரம் நிறைந்ததொரு காலக்கட்டத்துக்குள் நுழைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐ. நா. அவையில் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் வருடாந்திரக் கூட்டத்தில் இன்று(செப். 23) தொடக்க உரையாற்றிய ஐ. நா. தலைவர் ஆண்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருப்பதாவது: "80 ஆண்டுகளுக்கு முன், போர்களால் வறுத்தெடுக்கப்படதொரு உலகத்தில், தலைவர்களானவர்கள் ஒரு விருப்பத்தின்பால் முடிவெடுத்தார்கள். அதன்கீழ், வீண் சச்சரவுக்கு பதிலாக ஒத்துழைப்பு; சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு பதில் சட்டம் நிலைத்தன்மை; சண்டைக்கு பதில் அமைதி.
அந்தத் தலைவர்களின் விருப்பதாலேயே ஐக்கிய நாடுகள் அவை என்ற ஒன்று பிறக்க வழிவகுக்கப்பட்டது. மனிதநேயம் நீடித்திருக்க தேவையான செயல்திட்டமாக ஐ. நா. உருவாக்கப்பட்டது.
வெறுமனே ஆலோசனை நடத்துவதற்காகக் கூடும் அரங்கம் அல்ல ஐ. நா., அதிலினும் மேலானது. இதுவொரு, அமைதியை நிலைநாட்டும், வலியுறுத்தும் சக்தி.
சர்வதேச சட்டத்தின் பாதுகாவலன். மேம்பாட்டுக்கான தூண்டுகோள், இன்னல்களில் அல்லல்படும் மக்களுக்கான உயிர்நாடி. மனித உரிமைகளுக்கான ஒளி கோபுரம். உறுப்பு நாடுகளின் முடிவுகளை செயல் வடிவமாக்கும் மையம் இது” என்றார்.
மேலும் அவர் பேசும்போது, “அமைதியை, முன்னேற்றத்தை நிலைநாட்டும் தூண்கள் வேற்றுமைகள், சமத்துவமின்மையின் பாரம் தாங்காமல் தடுமாறுகிறது. பாலஸ்தீன மக்களுக்கு கூட்டுத் தண்டனை அளிப்பதை நியாயப்படுத்த, எந்தவொரு வாதத்தை சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
இறையாண்மையைக் கொண்ட நாடுகள் பிறர் மீது படைப்பலத்தை பயன்படுத்துகின்றன. பசி என்ற உணர்வை ஆயுதமாக்கி கையாளுகின்றனர். உண்மை ஊமையாக்கப்பட்டுள்ளது.
குண்டுகளால் தகர்க்கப்பட்ட நகரங்களிலிருந்து புகை எழும்புவது தொடருகிறது. முடமாக்கப்பட்ட சமூகங்களில் ஆத்திரம் பொங்குகிறது. ஆர்ப்பரித்து எழும்பும் கடல்கள் கடற்கரைகளை விழுங்குகின்றன.
உலகைச் சுற்றிலும், நாடுகள் பலவும் தங்கள் மீது எந்த சட்டங்களும் பாயாது தங்களுக்கு அவை பொருந்தாது என்ற போக்கில் செயலாற்றுகின்றனர். குடிமக்கள் பலியிடப்படுகிறார்கள், அவர்கள் தவிக்கவிடப்படுகிறார்கள், ஊமைகளாக்கப்படுகிறார்கள். ஆக, மனிதர்களை மனிதனைவிட கேவலமான ஒன்றாக நடத்தும் முறையை நாம் பார்த்து வருகிறோம்” என்று வேதனையுடன் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.