டிஜிட்டல் அரெஸ்ட் ஆன்லைன் மோசடியால் தில்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி தான் வாழ்நாள் முழுவதும் சேமித்த ரூ. 23 கோடியை இழந்துள்ளார்.
78 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தில்லியில் உள்ள தனது வீட்டில் மோசடி கும்பலால் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்யப்பட்டுள்ளார்.
தங்களை விசாரணை அமைப்பு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரை கிட்டத்தட்ட ஒரு மாதமாக ஆன்லைனிலே வைத்திருந்தனர். வங்கிக்குச் சென்றுவர மட்டுமே அவரை அனுமதித்துள்ளனர்.
ஆகஸ்ட் 1 முதல் செப். 4 வரை அவரது 3 வங்கிக் கணக்குகளில் இருந்து 20 பணப்பரிமாற்றங்கள் மூலமாக ரூ. 23 கோடி மோசடி நடந்துள்ளது.
நரேஷின் ஆதார் பல்வேறு குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி முதலில் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. பின்னர் மும்பை காவல்துறையினர், சிபிஐ, அமலாக்கத்துறை என்று கூறிக்கொண்டு பல எண்களில் இருந்து அழைப்பு வந்ததுள்ளது. நரேஷ் நம்பும்படி போலியான ஆவணங்களையும் தயாரித்து அனுப்பியுள்ளனர்.
நரேஷ் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு முறை வீடியோ காலில் வருமாறும் இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். இறுதியாக குற்றங்களில் இருந்து தப்பிக்க பணம் கேட்டு மிரட்டி பெற்றுள்ளனர்.
இறுதியாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதற்காக மோசடி கும்பல் ஒரு தொகை கேட்கவே, உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக பணத்தை டெபாசிட் செய்வதாகவும் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைவேன் என்றும் நரேஷ் கூறியுள்ளார். அவர் அப்படி கூறியதும் மோசடி கும்பல் அழைப்பைத் துண்டித்துவிட்டனர்.
'என்னுடைய முதுமை காலத்திற்காக நான் வாழ்நாள் முழுவதும் சேர்த்துவைத்த சேமிப்பைத் தவறவிட்டுவிட்டேன். என்னுடைய கதை மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்' என்று கண்ணீர் மல்க கூறுகிறார் நரேஷ்.
தில்லி காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது. முதியவர் இழந்த ரூ. 23 கோடியில் ரூ. 2.67 கோடியை மட்டுமே இதுவரை முடக்கியுள்ளதாகவும் நிதி மோசடிக்கு பல வங்கிக் கணக்குகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயன்படுத்தப்படுவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதையும் படிக்க | ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்! தினமும் ரூ. 85 கோடி இழப்பு!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.