வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுக நகரத்தில் உள்ள சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் முக்கிய முனையத்தை குத்தகைக்கு விடும் திட்டத்தை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெற்றது.
வங்கதேசத்தில் பிப்.12-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்திட்டம் திரும்பப் பெறப்பட்டது. சிட்டகாங் நியூ மூரிங் கன்டெய்னா் முனையத்தை துபையைச் சோ்ந்த டிபி வோ்ல்டு நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதாக துறைமுக அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனா்.
இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து துறைமுக ஊழியா்கள் கடந்த வாரம் 6 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன் பிறகு போராட்டத்தை தற்காலிகமாக இரண்டு நாள்கள் ஒத்திவைத்தனா். பின் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனா்.
இதைத்தொடா்ந்து, நியூ மூரிங் கன்டெய்னா் முனையத்தை குத்தகைக்கு விடும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக இடைக்கால அரசின் கப்பல் துறை ஆலோசகா் பிரிகேடியா் ஜெனரல் ஷகாவத் ஹுசைன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
வங்கதேசத்தின் 95 சதவீத வா்த்தகம் 4 சரக்குப் பெட்டக முனையங்கள் வழியாக நடைபெறுவதாகவும் அதில் 40 சதவீதம் நியூ மூரிங் முனையம் வாயிலாக மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.