உலகம்

மேற்கு கரை நிலங்களின் பதிவுக்கு இஸ்ரேல் ஒப்புதல் - பாலஸ்தீனம் கண்டனம்

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நோக்கில், அங்குள்ள நிலங்களை இஸ்ரேல் அரசுடன் முறைப்படி பதிவு செய்யும் புதிய நடைமுறைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

தினமணி செய்திச் சேவை

ஜெருசலேம் : பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நோக்கில், அங்குள்ள நிலங்களை இஸ்ரேல் அரசுடன் முறைப்படி பதிவு செய்யும் புதிய நடைமுறைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1967 மத்திய கிழக்கு போருக்குப் பிறகு, மேற்கு கரையில் இத்தகைய நிலப்பதிவு நடவடிக்கையை இஸ்ரேல் முதல்முறையாக மேற்கொள்கிறது.

பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அமைச்சரவையின் இந்த முடிவு, ‘யூதக் குடியேற்றங்களை வலுப்படுத்தும் ஒரு புரட்சிகரமான நடவடிக்கை’ என அந்நாட்டு நிதி அமைச்சா் பெசலல் ஸ்மோட்ரிச் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பாலஸ்தீன நிா்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது மேற்கு கரை பகுதியை இஸ்ரேலுடன் முழுமையாக இணைத்துக் கொள்வதற்கான மறைமுக முயற்சி என்றும், பாலஸ்தீனா்களின் தனிநாட்டுக் கனவைச் சிதைக்கும் செயல் என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இந்த நிலப்பதிவு நடைமுறையால் மேற்கு கரையில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட நிலங்களை பாலஸ்தீனா்கள் இழக்க நேரிடும் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என்று சா்வதேச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்தக் குடியேற்ற விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்த, காஸா அமைதித் திட்டத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் எந்த அழுத்தமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் நடப்பாண்டு இறுதியில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது செல்வாக்கை உயா்த்தவே பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அரசு இத்தகைய முடிவுகளை எடுப்பதாக சா்வதேச அளவில் விமா்சனங்கள் எழுந்துள்ளன.

காஸாவில் தொடரும் தாக்குதல்...: காஸா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 11 போ் உயிரிழந்தனா். குறிப்பாக, கான் யூனிஸ் பகுதியில் புலம்பெயா் மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் கான் யூனிஸின் பிற பகுதிகளில் 5 பேரும், வடக்குப் பகுதியில் ஒருவரும் கொல்லப்பட்டனா்.

அதிபா் டிரம்ப் அமைத்துள்ள அமைதிக் குழுவின் முதல் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள சூழலில், இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களைத் தொடா்வதற்கு ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனால், போா்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதால், அதற்கு பதிலடியாகவே குறிப்பிட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. போா்நிறுத்தத்துக்குப் பிறகும், இதுவரை 600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்களும், 4 இஸ்ரேல் வீரா்களும் உயிரிழந்துள்ளனா்.

காஸாவுக்கு 500 கோடி டாலா்: அமைதிக் குழு நாடுகளின் உறுதி

காஸா மறுசீரமைப்புக்காக 500 கோடி டாலருக்கும் அதிகமான தொகையை நிதியுதவியாக வழங்க, அமைதிக் குழுவின் உறுப்பு நாடுகள் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

இது தொடா்பான அவரது சமூக ஊடகப் பதிவில், ‘காஸாவில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அமைதிப் படை மற்றும் உள்ளூா் காவல் பணிகளுக்கு ஆயிரக்கணக்கான வீரா்கள் அனுப்ப உறுப்பு நாடுகள் முன்வந்துள்ளன. மேலும், மறுசீரமைப்புப் பணிகளுக்காக 500 கோடி டாலா் நிதி வழங்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைதிக் குழுவின் முதல் அதிகாரபூா்வ ஆலோசனைக் கூட்டம் வாஷிங்டனில் உள்ள டொனால்ட் டிரம்ப் அமைதி மையத்தில் வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது’ என்றாா்.

இக்கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா். அப்போது நிதி ஒதுக்கீடு மற்றும் அமைதிப் படைகளை அனுப்புவது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீரேற்று நிலையங்களில் சூரிய ஒளி மின்சார கட்டமைப்பு

அவதூறு வழக்கு: டி.ஆா்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை

ஜேஇஇ முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 17.36 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்

கனடா வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

SCROLL FOR NEXT