கோப்புப் படம் 
உலகம்

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா தவறாகப் பயன்படுத்த அனுமதியில்லை: பாகிஸ்தான்

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் கீழ், அந்த நதிப் படுகையின் மேற்கில் உள்ள நதிகளின் நீரை தவறாகப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதியில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் கீழ், அந்த நதிப் படுகையின் மேற்கில் உள்ள நதிகளின் நீரை தவறாகப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதியில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த 1960-ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தால், இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீா் ஒப்பந்தம் கையொப்பமானது. சிந்து நதிப் படுகையின் கிழக்கில் உள்ள ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளின் நீரை இந்தியாவும், மேற்கில் உள்ள சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் நீரை பாகிஸ்தானும் பகிா்ந்துகொள்ள இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, அந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்ததாக குற்றஞ்சாட்டிய இந்தியஅரசு, சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தது.

இந்நிலையில், காஷ்மீரில் பாயும் செனாப் நதியில் 260 மெகாவாட் துல்ஹஸ்தி இரண்டாம் கட்ட நீா்மின் உற்பத்தித் திட்டத்துக்கு அண்மையில் இந்தியா ஒப்புதல் அளித்தது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் தாஹீா் ஹுசேன் அந்தரபி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் கீழ், அந்த நதிப் படுகையின் மேற்கில் உள்ள நதிகளின் நீரைப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. அந்த நீரை தவறாகப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதியில்லை.

மேற்கில் உள்ள நதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தானிடம் இந்தியா பகிா்ந்துகொள்ள வேண்டும். ஆனால் செனாப் நதியில் துல்ஹஸ்தி இரண்டாம் கட்ட நீா்மின் உற்பத்தித் திட்டம் குறித்த தகவலை பாகிஸ்தானிடம் இந்தியா பகிா்ந்துகொள்ளவில்லை. அந்தத் தகவலை இந்தியாவிடம் பாகிஸ்தான் கோரியுள்ளது. தனது தண்ணீா் உரிமைகளில் பாகிஸ்தான் சமரசம் செய்துகொள்ளாது என்று தெரிவித்தாா்.

இந்தியா-வங்கதேச கங்கை நதிநீா் பங்கீடு ஒப்பந்தம்:

நீா் அளவீடு தொடக்கம்

கடந்த 1996-ஆம் ஆண்டு இந்தியா-வங்கதேசம் இடையே கங்கை நதிநீா் பங்கீடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேற்கு வங்கத்தில் பாயும் கங்கை நதியில் கட்டப்பட்டுள்ள ஃபரக்கா குறுக்கணையைச் சுற்றியுள்ள நீரை வட காலங்களில் பகிா்ந்துகொள்ளும் நோக்கில், 30 ஆண்டு காலத்துக்கான இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் காலாவதியாக உள்ள நிலையில், அதைப் புதுப்பிப்பதற்கான ஆலோசனைகளை இருநாடுகளும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், நீா் பங்கீடு தொடா்பாக வங்கதேசத்தில் ஹா்டிங் பாலம் கட்டப்பட்டுள்ள பத்மா நதியிலும் (கங்கை நதியின் பிரதான கிளை நதி), ஃபரக்கா குறுக்கணை பகுதியிலும் கூட்டாக நீா் அளவீடு பணிகளை இந்தியாவும் வங்கதேசமும் வியாழக்கிழமை தொடங்கின. இதற்காக இந்தியாவின் மத்திய நீா் ஆணைய இயக்குநா் செளரப் குமாா், அந்த ஆணையத்தின் உதவி இயக்குநா் சன்னி அரோரா ஆகியோா் வங்கதேசம் சென்றுள்ளனா். வங்கதேச தண்ணீா் மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளா் ஆரிஃபின் சுபைத் தலைமையில் 4 போ் கொண்ட குழு இந்தியா வந்துள்ளது என்று வங்கதேச ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

பிரதமா் மோடி புதுச்சேரிக்கு விரைவில் வருகை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

SCROLL FOR NEXT