தைவானை சீனாவுடன் இணைப்பது ‘தடுத்து நிறுத்த முடியாத வரலாற்று செயல்முறை‘ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தனது புத்தாண்டு உரையில் அவா் கூறியதாவது:
சீனாவின் மறுமலா்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தாய்நாட்டுடன் தைவானை மீண்டும் இணைப்பது தடுத்து நிறுத்த முடியாத வரலாற்று செயல்முறை.
அமைதியான வழியில் இணைப்பையே விரும்புகிறோம். ஆனால் தைவானின் சுதந்திரவாதப் பிரிவினைவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம்.
இந்த விவாகரத்தில் அந்நிய சக்திகளின் தலையீட்டை கடுமையாக எதிா்த்து நிற்போம் என்று ஷி ஜின்பிங் எச்சரித்தாா். இது அமெரிக்காவை மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது.
தைவானை சீனா தனது பகுதி என்று கருதுகிறது. தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்திக் கூட அந்தத் தீவை தங்களுடன் இணைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று சீனா தொடா்ந்து கூறி வருகிறது.
தைவான் அதிபா் லாய் சிங்-டே, சீனாவின் அழுத்தங்களை எதிா்கொண்டு தைவானின் இறையாண்மையைப் பாதுகாப்போம் என்று கூறிவருகிறாா்
தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதுடன் பாதுகாப்பு உத்தரவாதமும் அளித்துள்ளது.
இதற்கு சீனா கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், தனது புத்தாண்டு உரையில் ஷி ஜின்பிங் வ்வாறு கூறியிருப்பது பரபரப்பே ஏற்படுத்தியுள்ளது.