ஏபி
உலகம்

அண்டார்டிகா பனி உருகினால் பூமி என்னவாகும்?

அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகினால், பூமியின் நிலை என்னவாகும்?

இணையதளச் செய்திப் பிரிவு

அண்டார்டிகா என்றால் - பனிச்சறுக்கும் பென்குயின்கள் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால், அண்டார்டிகாவில் உள்ள பனி முழுவதும் உருகினால் என்னவாகும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

உலகின் தென் பகுதியில் 60 டிகிரி அட்ச ரேகைக்குக் கீழே அமைந்துள்ள நீர்ப் பகுதியே 'தென்முனைப் பெருங்கடல்' அல்லது 'அண்டார்டிக் பெருங்கடல்' ஆகும். இது அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றி அகழி போல் அமைந்துள்ளது.

அண்டார்டிகாவின் முக்கிய பணியாக பூமியின் காலநிலையை ஒழுங்குபடுத்துவதாகும். உலகின் 90 சதவிகித பனியையும் 70 சதவிகித நன்னீரையும் அண்டார்டிகா கொண்டுள்ளது. இந்த பனி உருகினால், உலகெங்கிலும் கடல் மட்டம் 200 அடி வரையில் உயரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதாவது, நாம் வசிக்கும் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் நீருக்கடியில் சென்று, மீன்களின் இருப்பிடமாக மாறிவிடும்.

இந்தப் பகுதியின் வடபுறத்தில் நீரின் வெப்ப அளவு சுமார் 6 டிகிரியும், தென்புறத்தில் நீர் வெப்ப அளவு சுமார் 2 டிகிரி வரையும் இருக்கலாம். தென்புறத்தில் அதிக அளவு நீரோட்டம் உண்டு.

அதிவேகமான ஊதல் காற்று கடலில் சலனத்தை உண்டுசெய்து, நீருக்கு அடியில் உள்ள உயிரினங்களையும் வாழச் செய்வதோடு, பல ஊட்டச் சத்துகளையும் உருவாக்குகிறது.

இதனால், கடற்பாசி, நுண்ணுயிர்கள், சிறு மீன்கள், 'கிரில்' எனப்படும் பிரான் போன்றவை செழித்து வளர்கின்றன. இவை அனைத்தும் பெங்குவின்கள், சீல்கள் போன்றவைகளுக்கும், பெட்ரல், ஆல்பெட்ராஸ் போன்ற பறவைகளுக்கும் உணவாகின்றன. இவ்வாறாக அண்டார்டிக் பெருங்கடல் சுமார் 10 ஆயிரம் துருவப் பகுதி உயிரினங்களுக்கு அடைக்கலம் தருகிறது.

மேலும், வளிமண்டலத்திலிருந்து வெப்பத்தையும் கரியமில வாயுவையும் கூடிய அளவு அண்டார்டிகா கிரகித்துக் கொள்கிறது. அதன் நீரோட்டமும் பருவகாலப் பனியும் மேலும் புவியின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் சக்தியாகவும் உள்ளன.

பொதுவாக, அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றியுள்ள கடற்பகுதி குளிர்காலத்தில் உறையத் தொடங்கி, கண்டத்தின் பரப்பளவை அதிகரிக்கிறது. அந்தப் பகுதி சற்றே மெல்லிய தகடு போல் நீண்ட தூரம் கடல்நீரை மூடியிருக்கும். அது கீழே நீர்ப் பகுதியில் உள்ள கடற்பாசி, நுண்ணுயிர்கள், கிரில் போன்றவற்றுக்குப் பாதுகாப்பையும் அளிக்கிறது. அதன் மேற்புறத்தை தரையாய் எம்பரர் பெங்குவின்கள் இனப்பெருக்கத்துக்கும் பிறந்த குஞ்சுகளை சில மாதங்கள் வளர்க்கவும் பயன்படுத்துகிறது.

புவி வெப்பமாகும்போது இந்தச் சூழ்நிலை மாறுகிறது. பெங்குவின்களின் இனப்பெருக்கத்துக்குத் தடங்கல்கள் ஏற்படுகின்றன. நீருக்கு அடியில் பெருகும் நுண்ணுயிர்கள் வளர்ச்சிக்கும் சிக்கல்கள் உண்டாகின்றன.

இங்கு 18 வகை பெங்குவின்கள் உள்ளன. இவற்றில் 11 வகை இனங்கள் குறைந்து வருகிறது. அடிலே, சிண்டிராப், கிங், எம்பரர் போன்ற வகை பெங்குவின்கள் கண்டத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.

2100 ஆம் ஆண்டு காலகட்டத்தில் புவி வெப்பமயமாதலால் அடெலி வகை பென்குயின்கள் 60 சதவிகிதம் வரையில் அழிவுநிலைக்குச் செல்லும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, இமயமலை போன்று எடை கொண்டவை அண்டார்டிகா பனிப்பாறைகள். இவ்வளவு எடைகொண்ட பாறைகள் உருகினால், பூமியின் அச்சில் மாற்றம் ஏற்படலாம். மேலும், பூமியின் சுழற்சி வேகத்தையும், நாள்களின் நேரத்தையும்கூட மாற்றக் கூடும்.

இதனிடையே, பல்லாயிரம் ஆண்டுகளாக பனிக்குள் உறைந்து கிடக்கும் கிருமிகளோ வாயுக்களோ வெளிவந்து, புதிய நோய்களையோ கடும் வெப்பத்தையோ ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உண்டு.

2002 முதல் 2020 வரையில், ஆண்டுக்கு சுமார் 149 பில்லியன் மெட்ரிக் டன் அளவிலான பனி உருகியுள்ளது.

அதிகப்படியான கரியமில வாயுதான் புவி வெப்பமயமாதலை அதிகரிக்கிறது.

கரியமில வாயுவை அதிகளவில் வெளியேற்றும் நாடுகளாக சீனா (30%), அமெரிக்கா (14%), இந்தியா (7%), ஐரோப்பிய ஒன்றியம் (6%), ரஷியா (5%) உள்ளன. இவை மட்டுமே சுமார் 62% அளவிலான கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன.

ஆகையால், புவி வெப்பமயமாதலைத் தடுக்க அதிகப்படியான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுக்க வேண்டும்.

If the Antarctic ice melts, destruction is inevitable!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யை சந்தித்தது உண்மை : உ.பி. உடன் தமிழகத்தை ஒப்பிடவில்லை - பிரவீன் சக்கரவர்த்தி

50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்... அமெரிக்காவுக்கு வழங்கியது வெனிசுவேலா!

நீ ஒரு கோழை.. துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!

தினந்தோறும் 17 முறை நிவேதனம் அளிக்கப்படும் கிருஷ்ணர் கோயில்!

பணவரவு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT