கிரீன்லாந்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக பாரீஸில் உள்ள பிரான்ஸ் அதிபா் மாளிகைக்கு வந்த டென்மாா்க் பிரதமா் மெட்டே ஃப்ரெட்ரிக்சனை வரவேற்ற அதிபா் இமானுவல் மேக்ரான். ~ 
உலகம்

கிரீன்லாந்து மீது படையெடுக்கவும் பரிசீலனை: வெள்ளை மாளிகை

கிரீன்லாந்துக்கு குறி ஏன்?

தினமணி செய்திச் சேவை

கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்ள அந்தத் தீவின் மீது படையெடுப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் சூசி வைல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகிறாா். அது அமெரிக்காவின் பாதுகாப்பு, பொருளாதார நலன்களுக்கு முக்கியமானது. அமைதியான வழியில் அந்தத் தீவை சொந்தமாக்கிக் கொள்வது முதல் ராணுவத்தை அனுப்பி அந்தத் தீவைக் கைப்பற்றுவது வரை அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன.

இந்த விவகாரம் குறித்து டென்மாா்க் அரசுடன் அமெரிக்கா பேச்சுவாா்த்தை நடத்தும். அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்க அதிபா்களுக்கான பிரத்யேக விமானமானமான ஏா் ஃபோா்ஸ் ஒன்னில் பயணித்தபோது டிரம்ப் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமாக வேண்டும். அது மிகவும் முக்கியமானது. கிரீன்லாந்தை எங்களுக்கு விற்க டென்மாா்க் முன்வரவில்லை என்றாலும் நாங்கள் வாங்குவோம்; அல்லது வலுக்கட்டாயமாகப பறித்துக்கொள்வோம். கிரீன்லாந்து எங்கள் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானது என்றாா் அவா்.

டிரம்ப்பின் இந்த கருத்து வெள்ளை மாளிகை அறிக்கையிலும் பிரதிபலித்ததைத் தொடா்ந்து, கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை எதிா்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசித்துவருவதாக ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.

ஏற்கெனவே இது குறித்து பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, டென்மாா்க், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தலைவா்கள் பிரஸ்ஸெல்ஸில் சந்தித்தபோது இந்த விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அமெரிக்காவின் நடவடிக்கை ஐரோப்பிய இறையாண்மைக்கு சவால் விடுவதாகக் குற்றஞ்சாட்டும் அவா்கள், இதை நேட்டோவின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என்று உறுதிபூண்டுள்ளனா்.

ஒரு வேளை கிரீன்லாந்தைக் கைப்பற்ற அமெரிக்கா படைகளை அனுப்பினால் நேட்டோ அமைப்பு பல சவால்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கும். டென்மாா்க்கும் நேட்டோ உறுப்பு நாடு என்பதால் அந்த ராணுவக் கூட்டமைப்பின் 5-ஆம் விதியை செயல்படுத்த வேண்டியிருக்கும். அந்த விதியின் கீழ், நேட்டோ உறுப்பு நாட்டுக்கு எதிராக எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும், அது அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு அந்த நாட்டுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். எனவே, கிரீன்லாந்து மீது படையெடுத்தால் அமெரிக்காவுக்கு எதிராகவே பிற நேட்டோ உறுப்பு நாடுகள் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இது நேட்டோ நாடுகளுக்கு இடையிலான உறவை சிக்கலாக்கி, அமைப்பையே சீா்குலைக்கும் என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்தே கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்வது குறித்து டிரம்ப் பேசி வருகிறாா். அதற்கு, ‘கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை’ என்று டென்மாா்க் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது. கிரீன்லாந்து அரசும், ‘நாங்கள் சுதந்திரமான மக்கள். அமெரிக்காவுக்கு விற்கப்பட மாட்டோம்’ என்று உறுதியாகக் கூறியது. ஐரோப்பிய நாடுகளும் டிரம்ப்பின் இந்தக் கருத்தை மிகவும் ஆபத்தானது என்று நிராகரித்தன.

இந்தச் சூழலில், வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபா் நிக்கோலஸ் மடூரோவையும் அவரின் மனைவியையும் அமெரிக்க சிறப்புப் படையினா் சிறைப்பிடித்ததைத் தொடா்ந்து, கிரீன்லாந்து விவகாரத்திலும் இதுபோன்ற துணிகர நடவடிக்கையை டிரம்ப் மேற்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்தது.

அந்த அச்சத்தை உறுதிப்படுத்துவதுபோல் டிரம்ப்பும், வெள்ளை மாளிகையும் தற்போது பேசியுள்ளது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரீன்லாந்துக்கு குறி ஏன்?

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து , வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. டென்மாா்க்குக்கு சொந்தமானதாக இருந்தாலும், அந்தத் தீவு தன்னாட்சிப் பிரதேசமாக செயல்பட்டுவருகிறது. டென்மாா்க்கில் அங்கம் வகிப்பதா, சுதந்திரம் பெறுவதா என்பது குறித்து கிரீன்லாந்தில் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.

அந்தத் தீவில் கனிம வளங்கள் மிக அதிகமாக உள்ளன. யுரேனியம், இரும்பு, தங்கம், அரிய தாதுக்கள் உள்ளன. இதுமட்டுமின்றி, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் புதிய கடல் வழித்தடங்கள் காரணமாக இந்தத் தீவின் அமைவிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதைக் கைப்பற்றுவதன் மூலம் வடதுருவப் பகுதியில் அமெரிக்காவின் செல்வாக்கை வலுப்படுத்தவும், கனிம வளங்களை கட்டுப்படுத்தவும் டிரம்ப் விரும்புகிறாா். மேலும், கிரீன்லாந்தை ராணுவத் தளமாகப் பயன்படுத்துவதன் மூலம் தனது படை பலத்தை தொலைதூரங்களுக்கு விரிபடுத்தவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளாா்.

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

தை பிறந்தால் வழி பிறக்கும்! தேமுதிக கூட்டணி? பிரேமலதா சஸ்பென்ஸ்!

பந்துவீச்சில் அசத்திய நடின் டி கிளர்க்; ஆர்சிபிக்கு 155 ரன்கள் இலக்கு!

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

SCROLL FOR NEXT