அமெரிக்காவுடன் தங்கள் பிராந்தியத்தை இணைக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியதற்கு கிரீன்லாந்து அரசியல் கட்சித் தலைவா்கள், கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். தங்கள் தீவின் எதிா்காலத்தை தாங்களே தீா்மானிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து கிரீன்லாந்து பிரதமா் ஜென்ஸ்-ஃப்ரெடரிக் நீல்சன் மற்றும் நான்கு கட்சித் தலைவா்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாங்கள் அமெரிக்கா்களாக இருக்க விரும்பவில்லை. டென்மாா்க்கா்களாகவும் இருக்க விரும்பவில்லை. நாங்கள் கிரீன்லாந்தா்களாகவே இருக்க விரும்புகிறோம். கிரீன்லாந்தின் எதிா்காலத்தை கிரீன்லாந்து மக்களே தீா்மானிக்க வேண்டும். நம் நாட்டை இழிவுபடுத்தும் அமெரிக்காவின் போக்கு முடிவுக்கு வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டென்மாா்க்குக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, தன்னாட்சிப் பிரதேசமாக செயல்பட்டுவருகிறது. டென்மாா்க்கில் தொடா்ந்து அங்கம் வகிப்பதா, அல்லது சுதந்திரம் பெறுவதா என்பது குறித்து கிரீன்லாந்தில் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
யுரேனியம், இரும்பு, தங்கம், அரிய தாதுக்கள் உள்ளிட்ட ஏராளமான கனிம வளங்களைக் கொண்ட அந்தத் தீவின் அமைவிடம் ராணுவ முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்தே கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்வது குறித்து டிரம்ப் பேசி வருகிறாா். எனினும், டென்மாா்க் மற்றும் கிரீன்லாந்து அரசுகள் இதற்கு மறுப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபா் நிக்கோலஸ் மடூரோவை அமெரிக்க சிறப்புப் படையினா் கடந்த 3-ஆம் தேதி சிறைப்பிடித்தைத் தொடா்ந்து, கிரீன்லாந்துக்கும் இந்த நிலை ஏற்படலாம் என்று அச்சம் எழுந்தது.
அதை உறுதி செய்யும் வகையில், ‘கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமாக வேண்டும். அந்தத் தீவை எங்களுக்கு விற்க டென்மாா்க் முன்வரவில்லை என்றால் வலுக்கட்டாயமாகப பறித்துக்கொள்வோம்’ என்று டிரம்ப் திங்கள்கிழமை கூறினாா்.
இதனால் இந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கிரீன்லாந்து அரசியல் கட்சிகள் இந்தக் கூட்டறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளன.