ஈரான் நாட்டில், திட்டமிடப்பட்டிருந்த 800 சிறைக் கைதிகளின் மரண தண்டனையை ரத்து செய்ததற்கு அந்நாட்டு அரசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
ஈரானின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கண்டித்து லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில், ஈரானின் அரசு அலுவலகங்கள், கட்டடங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதில், அரசுப்படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல்களில் இதுவரை 2,000-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், வன்முறையில் ஈடுபட்டு கைதான போராட்டக்காரர்களுக்குத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜன. 15) திட்டமிடப்பட்டிருந்த சுமார் 800 சிறைக் கைதிகளின் மரண தண்டனைகள் ரத்து செய்யப்பட்டதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அதிபர் டிரம்ப் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டதாவது:
“நேற்று திட்டமிடப்பட்ட தூக்குத் தண்டனைகள் (800 பேர்) அனைத்தையும் ஈரானின் தலைமை ரத்து செய்துள்ளதை நான் பெரிதும் மதிக்கிறேன். நன்றி!” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரானில் போராட்டக்காரர்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்தால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.