வெனிசுவேலா, கனடா ஆகிய நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் குறிப்பிட்ட செய்யறிவு (ஏஐ) புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகள், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து கடத்திச் சென்றனர். மேலும், அந்நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதையடுத்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை முழுவதுமாக அமெரிக்கா ஆக்கிரமிக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதற்கு, ஏராளமான ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வெனிசுவேலா, கனடா நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிப்பிட்டு செய்யறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட புகைப்படத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப் அவரது சமுக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் அலுவலகத்தில் டிரம்ப் தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். அவர் அருகில் உள்ள வரைப்படத்தில் வெனிசுவேலா, கனடா மற்றும் கிரீன்லாந்து அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.
இத்துடன், அந்தப் புகைப்படத்தில் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் அதிபர் டிரம்ப் பேசுவதைத் திகைப்புடன் கேட்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
இறையாண்மை கொண்ட நாடுகளை அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிப்பிட்டு அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
முன்னதாக, கனடா நாட்டை அமெரிக்காவின் புதிய மாகாணமாக இணைக்கப்போவதாக அதிபர் டிரம்ப் கூறியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
US President Donald Trump has released ai photograph that depicts Venezuela, Canada, and Greenland as American territories.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.