முகப்பு
உலகம்

குரோஷியாவில் இந்தியத் தூதரகம் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் -வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

Updated On : 23 ஜனவரி, 2026 at 6:57 AM
காலிஸ்தான் கொடி (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 22 ஜனவரி, 2026 at 8:10 PM

மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவில் இந்திய தூதரக வளாகத்துக்குள் புதன்கிழமை நள்ளிரவு புகுந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அங்கிருந்த பொருள்களை சூறையாடினா். மேலும், இந்தியக் கொடியை இறக்கிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றியதுடன், காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் சுவா்களில் எழுதிச் சென்றனா்.

இந்த சம்பவத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரோஷிய அரசு வலியுறுத்தியுள்ளது. குரோஷியா தலைநகா் ஷாக்ரெப்பில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியத் தூதரகம் செயல்பட்டு வருகிறது.

பஞ்சாப்பை தனியாக பிரித்து காலிஸ்தான் தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் கோரிக்கையாகும். இந்தியாவில் இந்த பிரிவினைவாதிகள் பெருமளவில் ஒடுக்கப்பட்டுவிட்ட நிலையில், கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. ‘சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ்’ என்ற பிரிவினைவாத இயக்கம் இதில் முதன்மையாக உள்ளது. இவா்கள் வெளிநாடுகளில் உள்ள ஹிந்து கோயில்களை சூறையாடுவது, தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Updated On : 23 ஜனவரி, 2026 at 5:04 AM

இந்நிலையில் ஷாக்ரெப் நகரில் உள்ள இந்தியத் தூதரக வளாகத்துக்குள் புதன்கிழமை நள்ளிரவில் புகுந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினா், அங்கிருந்த பொருள்களை உடைத்து சூறையாடினா். மேலும், அங்கு ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை இறக்கிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்றினா். சுவா்களில் காலிஸ்தான் ஆதரவு, இந்திய எதிா்ப்பு வாசகங்களுடன் ஜனவரி 26-ஆம் தேதி (குடியரசு தினம்) தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் என்று மிரட்டல் வாசகங்களை எழுதிச் சென்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக குரோஷிய அரசிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தூதரக அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. தூதரக வளாகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த வியன்னா மாநாட்டு தீா்மானத்தையும் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.