தவெகவுடன் காங்கிரஸ் துணைநிற்கிறதா? விஜய்க்கு கடும் கண்டனம்!
தவெகவுடன் உண்மையான காங்கிரஸ் துணைநிற்பதாக விஜய் கூறிய கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம்
தவெகவுடன் உண்மையான காங்கிரஸ் துணைநிற்பதாக விஜய் கூறிய கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் துணைநிற்பதாக விஜய் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் ராம் மோகன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் நடைபெற்றக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இன்று நடிகர் விஜய் வெளியிட்டுள்ள கருத்துகள் முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை மற்றும் அரசியல் உள்நோக்கத்துடன் திரித்துக் கூறப்பட்டவை என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் என்பது நூற்றாண்டு பாரம்பரியமும், இந்திய சுதந்திரத்திற்காக தியாக வரலாறும் கொண்ட ஒரு ஜனநாயக இயக்கமாகும். இந்தக் கட்சியை பணம் அல்லது அதிகாரத்தின் மூலம் யாராலும் 'கட்டுப்படுத்த” முடியாது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, அதன் கொள்கைகளுக்கும், மக்களின் நலன்களுக்கும் ஏற்ப செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு தவெக எத்தகைய திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.
காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை, நடிகர் விஜய்க்கு என்ன கொள்கை என்று புரியாத நிலையில் அந்த முயற்சிகள் தொடக்கத்திலேயே நிராகரிக்கப்பட்டன. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்த நடிகர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு, கொள்கை எதிரி என்று அறிவிக்கப்பட்ட பாஜகவை எதிர்த்து எந்தவித கருத்தும் கூற துணிவற்ற நிலையில் இருந்தார்.
காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை திமுகவோடு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கொள்கை கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. 2019, 2021, 2024 ஆகிய அனைத்து தேர்தல்களிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று வருகிறது.
இந்நிலையில், தவெகவோடு எந்த வகையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. ஆனால், காங்கிரஸில் ஆள்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட தவெகவுக்கு விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் தான் சிக்கினார்கள். ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், உண்மையான காங்கிரஸ் கட்சியினர் தவெகவுடன் இருப்பதாக கூறுவதைவிட, ஒரு அப்பட்டமான பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டு.
எனவே, காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்கின்ற வேலையை தவெக தலைவர் விஜய் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி, மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து வருகிறது. ஆனால், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விதமாக த.வெ.க. தலைவர் விஜய் அவதூறு கருத்துகளை வெளியிடுவது பொறுப்பற்ற செயலாகும்.
'உண்மையான காங்கிரஸ் வேறு எங்கோ உள்ளது” எனக் கூறுவது, காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் மட்டுமல்ல, அரசியல் நாகரீகத்திற்கும் எதிரானதாகும்.
எனவே, இத்தகைய தவறான மற்றும் ஆதாரமற்ற, அவதூறு கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற்று, காங்கிரஸ் கட்சியினரிடமும், பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Is the Congress standing by the TVK? Tamilnadu Congress Committee issues strong condemnation of Vijay!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.