ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
சுமாா் 1,500 மக்கள் வசிக்கும் ‘காா்கெல்லிகோ ஏரி’ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவசரக்கால மீட்புப் படையினா், அங்கு 2 பெண்கள், ஓா் ஆண் உயிரிழந்து கிடப்பதைக் கண்டறிந்தனா்.
படுகாயமடைந்த மற்றொருவா் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடக்கத்தில் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தபோதிலும், தற்போது அவா் நலமாக உள்ளதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா்.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேக நபரின் அடையாளத்தைக் காவல்துறையினா் கண்டறிந்துள்ளனா். இருப்பினும், உயிரிழந்தவா்களுடன் அவருக்கு இருந்த உறவுமுறை குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. அவரைப் பிடிப்பதற்காக காவல்துறையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா். பாதுகாப்புக் கருதி, அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிச. 14-ஆம் தேதி, சிட்னி கடற்கரையில் நடந்த யூதா்களின் ஹனுக்கா திருவிழா கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 15 போ் கொல்லப்பட்டனா். அந்தத் துயரச் சம்பவத்தின் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்ட வியாழக்கிழமையன்று மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.