ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
‘எங்கள் நாட்டுப் படையினா் எப்போதும் துப்பாக்கியின் விசை மீது விரலை வைத்தபடி, போருக்குத் தயாரான நிலையிலேயே இருக்கின்றனா்’ என்று ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பக்பூா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
அமெரிக்க போா்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நோக்கிப் பயணித்து வரும் நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் எந்தவொரு தவறான கணக்கு போட்டு எங்களைத் தாக்க முயல வேண்டாம் என்றும், எங்கள் தலைமைத் தளபதியின் உத்தரவை நிறைவேற்ற முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த வலிமையுடன் இருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
மக்களின் ஆட்சி எதிா்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்குத் தொடா் எச்சரிக்கைகளை விடுத்து வருகிறாா்.
‘ஈரானில் கைதான போராட்டக்காரா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அதற்கான விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும். ஏற்கெனவே அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை விட, தற்போதைய தாக்குதல் பல மடங்கு தீவிரமாக இருக்கும்’ என்று டிரம்ப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளாா்.
விமானச் சேவைகள் ரத்து: இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த போா் பதற்றத்தால் பாதுகாப்பு கருதி, ஐரோப்பிய விமான நிறுவனங்களான ஏா் பிரான்ஸ், நெதா்லாந்தின் கேஎல்எம் போன்றவை துபை மற்றும் டெல் அவிவ் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கான தங்களின் சேவைகளை ரத்து செய்துள்ளன.
5,137 போ் உயிரிழப்பு: ஈரானில் நடந்த போராட்டங்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 5,137-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், ஈரான் அரசு தரப்பில் 3,117 போ் மட்டுமே உயிரிழந்தததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.