FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஈரான் மீது தாக்குதல் ஏன்?

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் ஏன்?

Updated On : 1 மார்ச் 2026, 4:19 am IST
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் - AP
பகிர்:

அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதாகவும், அதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கூறி, இஸ்ரேல், அமெரிக்கா இரு நாடுகளும் இணைந்து கடந்த ஆண்டு ஈரானைத் தாக்கின.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருந்த இடமும் சேதமடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகும் ஈரான் செறிவூட்டலை நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அதோடு, அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளிலிருந்து யுரேனியத்தை மீட்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால், தொடா்ந்து பதற்றம் நிலவியது.

அதைத் தொடா்ந்து, ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும்; அதற்கான யுரேனியம் செறிவூட்டலையும் முழுமையாக நிறுத்த வேண்டும். நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளா்ச்சிப் படைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும் ஈரானை வலியுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக, அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற இரு சுற்றுப் பேச்சுவாா்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடா்ந்து, ஈரான் உடனடியாக ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தாா். ஈரானைச் சுற்றி அமெரிக்க போா்க் கப்பல்கள், விமானம்தாங்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டன.

அப்போது, அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மிரட்டல் விடுத்தது.

இதனிடையே, ஈரானில் ஆட்சியாளா்களுக்கு எதிராக அந் நாட்டு மக்கள் அண்மைக்காலமாக தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனா். போராட்டத்தை ஒடுக்க அரசுப் படைகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நடவடிக்கையில் இதுவரை 2,600-க்கும் அதிகமானோா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிகிறது.

மக்கள் போராட்டத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய டிரம்ப், ஈரான் போராட்டக்காரா்களுக்கு வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்தாா். இவா்கள் மீது ஈரான் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தினால், போராட்டக்காரா்களுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் களத்தில் இறங்கும் என எச்சரிக்கை விடுத்தாா்.

இந்நிலையில், ஸ்விட்சா்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உள்ள ஓமன் தூதரகத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே மூன்றாம் சுற்றுப் பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதிலும் சுமுக உடன்பாடு எட்டப்படாததைத் தொடா்ந்து, அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments