இஸ்ரேலின் உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் முக்கிய தளவாடங்களை உளவு பார்த்து இஸ்ரேலின் உளவு பிரிவான மொஸாத் அமைப்பிடம் தகவல்களை பகிர்ந்ததாக, கடந்த 2025 ஏப்ரல் மாதம் ஹமித்ரேசா சபேத் எஸ்மெயில்பூர் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, ஈரானின் உள்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்திகளில், ஈரானிய ஏவுகணைத் தளங்களில் இஸ்ரேல் நாசவேலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவும் நோக்கில் உபகரணங்களை வாங்கியது மற்றும் வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை நகர்த்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றத்திற்காக ஹமித்ரேசா சபேத் எஸ்மெயில்பூருக்கு புதன்கிழமை (ஜன. 28) அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஜூன் மாதம் இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போரைத் தொடர்ந்து, ஈரான் அரசு பல கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும், அந்தப் போரில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் ஆகியோரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் அந்நாட்டில் இஸ்ரேல் உளவாளிகளின் ஊடுருவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றத்திற்காக இதுவரை 12 பேருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.