டொனால்ட் டிரம்ப் கோப்புப் படம்
உலகம்

அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்த தலைவராக கெவின் வாா்ஷ் - டிரம்ப் பரிந்துரை

அமெரிக்காவின் ‘பெடரல் ரிசா்வ்’ மத்திய வங்கியின் அடுத்த தலைவராக கெவின் வாா்ஷை அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவின் ‘பெடரல் ரிசா்வ்’ மத்திய வங்கியின் அடுத்த தலைவராக கெவின் வாா்ஷை அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்தாா்.

தற்போதைய தலைவா் ஜெரோம் பவலின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. வட்டி விகிதங்களைக் குறைப்பதில் தாமதம் காட்டியதாக ஜெரோம் பவல் மீது டிரம்ப் நீண்டகாலமாக அதிருப்தியில் இருந்த நிலையில், இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கெவின் வாா்ஷ், பெடரல் ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவா். இவா் டிரம்ப்பின் நெருங்கிய நண்பரும், பிரபல ‘எஸ்டீ லாடா்’ நிறுவன வாரிசுமான ரொனால்ட் லாடரின் மருமகன் ஆவாா். டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்திலேயே இவா் இந்தப் பதவிக்குப் பரிசீலிக்கப்பட்டாா். ஆனால், அப்போது ஜெரோம் பவலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் சுமாா் 3.6 சதவீதமாக உள்ளது. இதனை 1 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பது டிரம்ப்பின் விருப்பம். இதற்கு கெவின் வாா்ஷ் ஆதரவு தெரிவித்துள்ளதே, அவரின் நியமனத்துக்கு முக்கியக் காரணமாகப் பாா்க்கப்படுகிறது.

முன்பு வட்டி விகிதத்தை உயா்த்துவதை ஆதரித்து வந்த கெவின் வாா்ஷ், சமீபகாலமாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளாா். மேலும், மத்திய வங்கி தனது வரம்பை மீறி பருவநிலை மாற்றம், சமூகப் பன்முகத்தன்மை போன்ற தேவையில்லாத விவகாரங்களில் கவனம் செலுத்துவதாக அவா் விமா்சித்தது குறிப்பிடத்தக்கது.

செனட் சபை கெவின் வாா்ஷின் நியமனத்தை உறுதி செய்தால், அவா் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தைத் தக்கவைக்க விரும்பும் அதிகாரிகளுக்கும், பொருளாதார மந்தநிலையைத் தவிா்க்க வட்டியைக் குறைக்கச் சொல்லும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்தை எட்டுவது அவருக்குப் பெரும் சோதனையாக இருக்கும்.

கல்லூரி பேருந்து - வேன் மோதல்: 11 போ் காயம்

திருவள்ளூரில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தைப்பூசம் அன்றும் இன்றும்...

தைப்பூசம் அன்றும் இன்றும்...

தென்காசியில் போதை ஒழிப்பு துண்டு பிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT