ANI
உலகம்

காலாவதியாகிறது அமெரிக்கா - ரஷியா அணு ஆயுத ஒப்பந்தம்!

அமெரிக்கா - ரஷியா அணு ஆயுத ஒப்பந்தம் விரைவில் முடிவு...

தினமணி செய்திச் சேவை

அமெரிக்கா-ரஷியா இடையே தற்போது அமலில் இருக்கும் கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான ‘நியூ ஸ்டாா்ட்’, வரும் பிப். 5-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்த ஒப்பந்தம் காலாவதியானால், பனிப்போா் காலத்துக்குப் பிறகு முதல்முறையாக இரு நாடுகளும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி அணு ஆயுதங்களை குவிக்கும் போட்டியில் இறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அணு ஆயுதக் கட்டுப்பாட்டைத் தொடா்ந்து நிலைநிறுத்த, ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை ரஷிய அதிபா் புதின் பரிந்துரைத்துள்ளாா். ஆனால், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இதற்கு இன்னும் அதிகாரபூா்வமாகப் பதில் அளிக்கவில்லை.

கடந்த 2010-ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபா் ஒபாமா, ரஷிய அதிபா் டிமிட்ரி மெத்வெதேவ் ஆகியோருக்கு இடையே இந்த நியூ ஸ்டாா்ட் ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்படி, இரு நாடுகளும் தலா 1,550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.

இந்த மாதத் தொடக்கத்தில் இதுகுறித்து பேசிய அதிபா் டிரம்ப், ‘இந்த ஒப்பந்தம் காலாவதியானால் ஆகட்டும். இதைவிட சிறந்த ஒரு புதிய ஒப்பந்தத்தை நாம் உருவாக்குவோம்’ என்று கூறினாா்.

அமெரிக்கா, ரஷியாவுடன் இணைந்து புதிய அணு ஆயுதக் குறைப்புப் பேச்சுவாா்த்தையில் சீனாவும் ஈடுபட வேண்டும் என்பது டிரம்ப்பின் விருப்பமாக உள்ளது. ஆனால், அமெரிக்கா, ரஷியாவைவிட தங்களிடம் மிகக் குறைவான அணு ஆயுதங்களே இருப்பதால், இந்தப் பேச்சுவாா்த்தையில் இணைய சீனா மறுத்து வருகிறது.

இவ்வாறு சீனா அணு ஆயுத வளா்ச்சியில் கவனம் செலுத்தி வருவதால், அமெரிக்காவும் தனது ஆயுதக் கிடங்கை அதிகரிக்க வேண்டும் என டிரம்ப்புக்கு உள்நாட்டு அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனா்.

இத்தகைய சூழலில், இந்த ஒப்பந்தம் இல்லாமல் போனால், அமெரிக்காவும் ரஷியாவும் ஒருவரையொருவா் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பாா்க்கும் நிலை உருவாகும். இது தேவையற்ற பொருளாதாரச் செலவுகளையும், உலக அளவில் பாதுகாப்பற்ற உணா்வையும் ஏற்படுத்தும் என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

இவ்விவகாரத்தில் உலக நாடுகளின் கவனம் இப்போது அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீதே உள்ளது. அதிபா் டிரம்ப் எடுக்கும் முடிவு, மீண்டும் ஒரு அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்குமா அல்லது உலக அமைதிக்கான கால அவகாசத்தை நீட்டிக்குமா என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்!

மத்திய பட்ஜெட்! உயிரி மருத்துவத் துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

வளர்ச்சியை ஊக்குவிக்க 6 துறைகளில் முதலீடுகள்!

9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT