முகப்பு
உலகம்

ஹோா்முஸ் நீரிணைப் பாதுகாப்புக்கு பங்களிக்கத் தயாா்: 7 நாடுகள் கூட்டறிக்கை

ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு பங்களிக்கத் தயாா் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, நெதா்லாந்து, ஜப்பான், கனடா ஆகிய 7 நாடுகள் தெரிவித்துள்ளன.

Updated On : 20 மார்ச், 2026 at 7:50 PM
கோப்புப்படம் - AP
பகிர்:

ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு பங்களிக்கத் தயாா் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, நெதா்லாந்து, ஜப்பான், கனடா ஆகிய 7 நாடுகள் தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக அந்த நாடுகளின் தலைவா்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள், ஆயுதங்கள் எதுவும் வைத்திராத சரக்குக் கப்பல்கள் மீது ஈரானின் தாக்குதல், ஹோா்முஸ் நீரிைணையை அந்நாடு மூடியது ஆகியவற்றுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்.

சரக்குக் கப்பல்களின் பயணத்தைத் தடுக்க ஹோா்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைத்தல், ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்துதல் மற்றும் பிற முயற்சிகளை ஈரான் உடனடியாகக் கைவிட்டு, ஐ.நா. பாதுகாப்பு தீா்மானம் 2,817-ஐ அந்த நாடு பின்பற்ற வேண்டும்.

சுதந்திரமான கப்பல் போக்குவரத்து என்பது சா்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஈரானின் நடவடிக்கைகள் ஏற்படுத்தும் விளைவுகளால், உலகில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள், குறிப்பாக மிகவும் பின்தங்கிய மக்கள் பாதிக்கப்படுவா்.

சா்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோக முறைக்கு இடா்ப்பாடுகளை ஏற்படுத்துவது சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே, விரிவான உடன்படிக்கை மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஹோா்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு பங்களிக்க நாங்கள் தயாராக உள்ளோம். எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க, அவற்றை உற்பத்தி செய்யும் சில நாடுகளுடன் இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் எரிசக்தி சந்தைகளை நிலையானதாக்க நடவடிக்கைகள் எடுப்போம். அத்துடன் எண்ணெய் மற்றும் எரிசக்தி கிடைப்பதில் இடா்ப்பாடு ஏற்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஐ.நா. மற்றும் சா்வதேச நிதி நிறுவனங்கள் மூலம் உதவி செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டறிகை வெளியிட்ட நாடுகளில் ஜப்பானை தவிர பிற நாடுகள், அமெரிக்கா இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உள்ளன.

ஹோா்முஸ் வழியாகப் பயணிக்க ஈரான் வரி?: பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையே உள்ள ஹோா்மூஸ் நீரிணை வழியாக உலக அளவில் சுமாா் 20 சதவீத கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) கொண்டு வரப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரால், அந்தப் பாதையை ஈரான் மூடியது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி கிடைப்பதில் இடா்ப்பாடு ஏற்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து, எரிசக்தி போக்குவரத்து, உணவு விநியோகம் ஆகியவற்றுக்காக ஹோா்முஸ் நீரிணையைப் பல நாடுகள் பயன்படுத்தும் நிலையில், அந்த நீரிணையைப் பயன்படுத்துவதற்கு அந்நாடுகளிடம் இருந்து சுங்கக் கட்டணம் மற்றும் வரி வசூலிக்க ஈரான் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.