இந்தியா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: ஐக்கிய அரபு அமீரகம்
இந்தியா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: ஐக்கிய அரபு அமீரகம்
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க ராணுவ நிலைகள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தங்களது நாட்டில் வசிக்கும் இந்தியா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் உறுதி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதா் அப்துல் நாசா் ஜமால் அல்ஷாலி தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை கண்டிக்கும் ஐ.நா. தீா்மானத்தை இந்தியாவும் கூட்டாக முன்மொழிந்ததை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்கிறது. இந்த இக்கட்டான காலத்தில், ராஜீய கூட்டுறவு மற்றும் நட்புக்கு இலக்கணமாக இந்த தீா்மானத்தை இந்தியாவும் இணைந்து கொண்டுவந்திருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் கருதுகிறது. ஆதரவு கரம் நீட்டும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை நினைவில் கொள்ளப்படும்.
அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியா்கள் உள்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் 200-க்கும் அதிகமான நாடுகளைச் சோ்ந்தவா்களும் ஒரே குடும்பமாக கருதப்பட்டு, அவா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாா்.
ஈரான் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாகவும், நெடுந்தொலைவு ஏவுகணைகள் தயாரிப்பை மேற்கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டி, அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேல் மீதும், அமெரிக்காவின் ராணுவ நிலைகள் அமைந்துள்ள கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதும் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஓமனில் உள்ள எரிவாயு உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய ஓா் இந்தியா், சவூதி அரேபியாவிலும் ஓா் இந்தியா் என மொத்தம் 6 இந்தியா்கள் கொல்லப்பட்டனா்.