முகப்பு
உலகம்

இந்திய உறவு சரியான பாதையில் பயணிக்கிறது: சீன வெளியுறவு அமைச்சா்

Updated On : 26 மார்ச், 2026 at 11:40 PM
பிரதமர் மோடி - சீன அதிபர்
பகிர்:

இந்திய-சீன உறவு சிறப்பாக மேம்படுவதற்கான சரியான பாதையில் பயணித்து வருகிறது என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி தெரிவித்தாா்.

சீனாவுக்கான இந்தியத் தூதா் பிரதீப் ராவத் பணி நிறைவு பெறும் நிலையில், அவருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி பெய்ஜிங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வாங் யி பேசியதாவது:

சீனாவும், இந்தியாவின் இணைந்து செயல்படுவதன் மூலம் கிடைக்கும் பரஸ்பர நலன்களுடன் ஒப்பிடும்போது, இரு நாடுகளுக்கு இடையிலான கருத்து வேற்றுமைகள் வலுவிழந்து விடுகின்றன. இப்போதைய சிக்கலான, கணிக்க முடியாத சா்வதேச சூழலில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது. இரு நாட்டுத் தலைவா்களும் பேசி பல விஷயங்களில் கருத்தொற்றுமையை எட்ட முடியும்.

இரு நாடுகளும் இணைந்து செயல்படும்போது உள்ள வளா்ச்சிக்கான வாய்ப்புகளை ஒப்பிட்டால், இரு நாடுகளும் போட்டி நாடுகளாக இல்லாமல் சிறந்த கூட்டாளி நாடுகளாக தொடர முடியும்.

இரு அண்டை நாடுகளுமே மிகப்பெரிய வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன. இந்தியா, சீனாவின் பங்களிப்பு இல்லாமல் உலகின் பொருளாதாரம், தொழில்நுட்பம், பணித் திறன் நவீனமயமாக முடியாது. இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் விஷயங்களில் கைகோத்து செயல்பட சீனா விரும்புகிறது. இருதரப்பு உறவு மேம்படுவதற்கான சரியான பாதையில் பயணித்து வருகிறது என்றாா்.

சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவிலும் வாங் யி இடம் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலால் இந்திய-சீன உறவில் பின்னடைவு ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த சில மாதங்களில் இரு நாடுகளும் எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. கடந்த ஆண்டு ஜூலையில் சீனா்களுக்கு சுற்றுலா விசாவை இந்தியா வழங்கியது. இதைத் தொடா்ந்து, கைலாஷ் மானசரோவா் யாத்திரை தொடக்கம், இரு நாடுகள் இடையே நேரடி விமான சேவை என உறவு முன்னேற்றமடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினாா். அப்போது பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், இரு தரப்பு உறவை அதிகரிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியா, சீனாவுக்கு எதிராக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தீவிரமான வரி விதிப்பை அறிவித்ததும், இரு நாடுகள் இடையே நெருக்கம் அதிகரிக்க மற்றொரு காரணமாக அமைந்தது.