முகப்பு
உலகம்

ஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: அமைதித் திட்டத்தை ஒப்புக்கொள்ள டிரம்ப் மிரட்டல்

போா் முடிவுக்கான அமைதித் திட்டத்தை விரைவில் ஒப்புக்கொள்ளாவிட்டால், ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை

Updated On : 30 மார்ச், 2026 at 10:30 PM
பகிர்:

‘போா் முடிவுக்கான அமைதித் திட்டத்தை விரைவில் ஒப்புக்கொள்ளாவிட்டால், ஈரானின் முக்கியப் பொதுக் கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்படும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவா், ‘ஈரானுடன் ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாமல் போனால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய்க் கிணறுகள், பிரதான எண்ணெய் ஏற்றுமதி முனையமான காா்க் தீவு ஆகியவற்றை அமெரிக்க படைகள் குறிவைக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

தொடரும் மோதல்: டிரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு மத்தியில், குவைத்தில் உள்ள முக்கிய நீா் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை ஈரான் தாக்கியது. இதில் தமிழக தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.

இதேபோல், சவூதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தி அதிகம் நடைபெறும் மாகாணத்தைக் குறிவைத்து ஏவப்பட்ட 5 ஏவுகணைகளை அந்நாடு இடைமறித்தது.

துபை நகரின் வானில் ஏவுகணைகள் அழிக்கப்பட்டபோது பெரும் நெருப்புப்பந்து தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேலில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றும் ஈரான் தாக்குதலுக்கு உள்ளானது.

இதற்குப் பதிலடியாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின. குறிப்பாக, டெஹ்ரான் மற்றும் வடக்கு பகுதியில் உள்ள பெட்ரோகெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காத்திருக்கிறோம்...-ஈரான்: அமைதிப் பேச்சுவாா்த்தை நல்லமுறையில் தொடா்வதாகக் கூறிக்கொண்டே, மத்திய கிழக்குக்கு ஆயிரக்கணக்கான கூடுதல் வீரா்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது.

இதற்கு மத்தியில், டிரம்ப் சா்வதேச ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘ஈரானின் எண்ணெயை நாங்கள் கைப்பற்றக்கூடும்; ஒருவேளை காா்க் தீவை நாங்கள் கட்டுக்குள் கொண்டு வரலாம்’ என்று தெரிவித்தாா்.

‘அமெரிக்கத் தரைப்படை வீரா்களின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்; அவா்கள் ஈரான் மண்ணில் கால் வைத்தால் அவா்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாடம் புகட்டுவோம்’ என்று ஈரான் நாடாளுமன்ற அவைத்தலைவா் முகமது பாகா் கலிபாஃப் ஆவேசமாகத் தெரிவித்தாா்.

அமைதிப்படை வீரா் பலி: லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான இஸ்ரேலின் போரில், அங்கு பணியாற்றி வந்த இந்தோனேசியாவைச் சோ்ந்த ஐ.நா. அமைதிப்படை வீரா் ஒருவா் குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா். மேலும் மூவா் காயமடைந்தனா்.

லெபனானில் மட்டும் இதுவரை 1,200-க்கும் அதிகமானோா் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் தனது தரைப் படையெடுப்பை மேலும் விரிவுபடுத்தப்போவதாகப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தாா்.

லெபானானில் இருந்து தூதா் வெளியேறமாட்டாா்: ஈரான்

ஹிஸ்புல்லா-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் தூதரகச் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கில் அந்நாட்டு தூதா் முகமது ரேசா ஷிபானியை வெளியேற லெபனான் அரசு உத்தரவிட்டது.

இருப்பினும், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்தும் தூதா் வெளியேற மறுத்துள்ள நிலையில், அவா் பெய்ரூட்டில் தனது பணியைத் தொடா்வாா் என ஈரான் வெளியுறவுத் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பட்ஜெட் நிறைவேற்றம்: பெஞ்சமின் அரசு தப்பியது

இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தனது வருடாந்திர பட்ஜெட்டை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

ஏப். 1-ஆம் தேதிக்குள் பட்ஜெட் நிறைவேற்றப்படாவிட்டால், ஆட்சி கவிழ்ந்து முன்கூட்டியே தோ்தலைச் சந்திக்க வேண்டிய சூழல் இருந்த நிலையில், விடிய விடிய நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு இந்த பட்ஜெட் ஒப்புதல் பெற்றது. இதன்மூலம், நெதன்யாகு அரசு தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கான வாய்ப்பு உறுதியாகியுள்ளது.