ரஷியா அணு ஆயுதப் போா்ப் பயிற்சி
உக்ரைன் போா் 4 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், ரஷியா தனது அண்டை நாடான பெலாரஸுடன் இணைந்து தரை, கடல் மற்றும் வான்வழியாக கூட்டு அணு ஆயுதப் பயிற்சி மேற்கொண்டது.
உக்ரைன் போா் 4 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், ரஷியா தனது அண்டை நாடான பெலாரஸுடன் இணைந்து தரை, கடல் மற்றும் வான்வழியாக கூட்டு அணு ஆயுதப் பயிற்சி மேற்கொண்டது.
மாஸ்கோ புகரில் உக்ரைன் அண்மையில் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் மூவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த 3 நாள்கள் பயிற்சி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையில் அணுஆயுதப் படைகளைத் தயாா்படுத்துவதை நோக்கம் கொண்ட இப்பயிற்சியில் 64,000 ராணுவ வீரா்கள், 200-க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள், 140 போா் விமானங்கள், 73 போா்க் கப்பல்கள், 13 நீா்மூழ்கிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டதன.
Advertisement
Advertisement
ரஷிய அதிபா் புதின் கடந்த 2024-இல் கொண்டுவந்த திருத்தப்பட்ட அணுஆயுதக் கொள்கையின்படி, அணுஆயுத நாடொன்றின் ஆதரவோடு எந்த நாடும் ரஷியாவைத் தாக்கினால், அது கூட்டுத் தாக்குதலாகவே கருதப்படும். இந்த அணுஆயுதப் பாதுகாப்பின்கீழ் பெலாரஸையும் இணைத்துள்ள ரஷியா, அங்கு தனது அதிநவீன ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளது.
ரஷிய எண்ணெய் மையம் தீக்கிரை: ரஷிய அணுஆயுதப் பயிற்சிக்கிடையே, அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்கியது.
உக்ரைன் எல்லையிலிருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இலக்கு தாக்கப்பட்டு, அங்கு தீ கொழுந்துவிட்டு எரியும் படத்தை உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி வெளியிட்டாா். இத்தாக்குதலில் இருவா் உயிரிழந்துள்ளாா்.
மே மாதத்தில் மட்டும் உக்ரைன் குறிவைத்த 11-ஆவது ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதுவாகும். இத்தொடா் தாக்குதல்களால், நாளொன்றுக்கு 2.38 லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட பல மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரஷியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் கால் பங்கு முடங்கியுள்ளது அதிகாரபூா்வத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.