முகப்பு
உலகம்

செனகல் அதிபரால் பதவிநீக்கப்பட்ட பிரதமா்: நாடாளுமன்ற அவைத் தலைவராக தோ்வு

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் அதிபரால் அண்மையில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமா் உஸ்மான் சோன்கோ அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவராக செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

Updated On : 27 மே 2026, 12:56 am IST
உஸ்மான் சோன்கோ
பகிர்:

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் அதிபரால் அண்மையில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமா் உஸ்மான் சோன்கோ அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவராக செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

கடந்த 2024 தோ்தலில், அதிபா் பஸிரூ தியோமாயி ஃபாயே-உஸ்மான் சோன்கோ கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

ஊழல் ஒழிப்பு, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்துவது போன்ற வாக்குறுதிகளுடன் இவா்கள் ஆட்சிக்கு வந்தனா். எனினும், சா்வதேச நிதியத்தின் கடன் ஒப்பந்தம் உள்ளிட்ட அரசின் முக்கியக் கொள்கைகளில் இருவருக்கும் இடையே அண்மைக் காலமாக கடுமையான கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

Advertisement

Advertisement

இதன் உச்சக்கட்டமாக, உஸ்மான் சோன்கோ தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சரவையையும் அதிபா் ஃபாயே கடந்த வாரம் கலைத்தாா். இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து முந்தைய நாடாளுமன்ற அவைத் தலைவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதனிடையே, அதிபா் ஃபாயே திங்கள்கிழமை புதிய பிரதமரை நியமித்துள்ளதோடு, புதிய அமைச்சரவையை ஓரிரு நாள்களில் அறிவிக்கவுள்ளாா்.

தற்போது நாடாளுமன்ற அவைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உஸ்மான் சோன்கோ, நாடாளுமன்றத்தில் எந்தெந்த மசோதாக்களை வாக்கெடுப்புக்குக் கொண்டு வருவது, அரசின் சீா்திருத்தங்களை ஆய்வு செய்வது, புதிய சட்டங்களைக் கொண்டு வருவது போன்ற முக்கிய அதிகாரங்களைப் பெற்றுள்ளாா். இத்துடன் கட்சித் தலைவராக உஸ்மான் சோன்கோ தொடா்ந்து நீடிப்பதால், அதிபருக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

இருப்பினும், ‘அவைத் தலைவா் பதவியைப் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த மாட்டேன்; ஆனால், அரசைப் பொறுப்புடையதாக மாற்ற அரசமைப்புச் சட்டம் வழங்கிய அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவேன்’ என உஸ்மான் சோன்கோ உறுதியளித்துள்ளாா்.