/

'கவின் வெளியேறாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவுகளே மாறியிருக்கும்' - உண்மையை ஒப்புக்கொண்ட கமல் ஹாசன்! 

கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறாவிட்டால் போட்டியின் முடிவுகளே மாறியிருக்கும் என்று நடிகர் கமல் ஹாசன் கூறியதை கவினின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

News image

Kavin in Biggboss

Updated On :7 அக்டோபர் 2019, 8:20 am

DIN

கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறா விட்டால் போட்டியின் முடிவுகளே மாறியிருக்கும் என்று நடிகர் கமல் ஹாசன் கூறியதை கவினின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி தொடங்கி, 105 நாட்களுடன் நேற்று நிறைவுற்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், 100 நாட்களைக் கடந்து கடைசி வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் முகேன், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் ஆகிய 4 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகினர்.  நடிகர் கமல் ஹாசன் மூன்றாவது முறையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Story image

நேற்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் டைட்டில் வின்னரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதிப் போட்டியாளர்களாக இருந்த நால்வரில் முதலில் ஷெரின்(4ம் இடம்) வெளியேற்றப்பட, அடுத்து லாஸ்லியா(3ம் இடம்) வெளியேற்றப்பட்டார். இறுதியாக  பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற்றுள்ளார்.  முகேனைத் தொடர்ந்து, 'ரன்னர் அப்'(இரண்டாம்) பட்டத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பெற்றார். 

பிக் பாஸ் சீசன்- 3 போட்டியாளர்களில் அதிகமாக விமர்சனங்களை எதிர்கொண்டது 'சரவணன் மீனாட்சி' புகழ் 'கவின்' தான். தொடர்ந்து கவின் மீது எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவுகள் குவிந்த வண்ணம் இருந்தன. இதற்கு என்ன காரணம் என இன்றுவரை பலரும் குழப்பத்தில்தான் இருக்கின்றனர். 

Story image

அதிலும், கவின் ரூ. 5 லட்சத்தைபே பெற்றுக்கொண்டு வெளியேறிய பிறகு 'நட்பின் நாயகன் கவின்' என்று அவரது ரசிகர்கள் கொண்டாடினர். கவின் ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் வீட்டில் ஏதேனும் பிரச்னைக்கு ஆளாகும் போது, ரசிகர்கள் ட்விட்டரில் அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின. 

இதுவரை அதிக முறை நாமினேட் செய்யப்பட்டவர், நாமினேஷனில் அதிக ஓட்டுகள் வாங்கியவர், அதிகமாக எதிர்மறையான விமர்சனங்களை கடந்தவர், லாஸ்லியா, சாண்டி தவிர மற்ற போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்படுவர், என்ற 'இந்த' பெருமைகள் கவினையேச் சாரும். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் தொடர்பான ஹேஷ்டேக்குகள் தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ட்ரெண்டாகியுள்ளன.

Story image

இதுவரை பிக் பாஸின் மொத்த ப்ரோமோக்கள் 268. இதில் 236 ப்ரோமோக்களில் கவின் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் இடம்பெறும் ப்ரோமோக்கள் அதிக பார்வையாளர்களைப் பெற்றும் சாதனை படைத்துள்ளது. 

கவினை அவரது நண்பர் பிரதீப், கன்னத்தில் அறைந்தது, கவின் வீட்டை விட்டு வெளியேறியது, வெளியேறிய பின்னர் வார இறுதியில் கமலுடன் தோன்றும் கவின், கடைசி நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் கவின் வந்த இந்த ப்ரோமோக்கள் அதிகப் பார்வையாளர்களைப் பெற்றதில் குறிப்பிடத்தக்கவை. 

நேற்றைய பிக் பாஸ் கொண்டாட்டத்திலும் கவின் ஆர்மிகள் ட்விட்டரை விடவில்லை. #BB3RealTangibleManKavin என்ற ஹேஷ்டேக் நேற்று ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது. 

Story image

கவின் மேடையில் தோன்றிய போதும், அவர் பேசிய போதும் ரசிகர்களின் ஆரவாரமே அவருக்கான ஆதரவை பிரதிபலிப்பதாக இருந்தது. 

பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் கவினுக்கு 'கேம் சேஞ்சர்' விருது வழங்கப்பட்டது. ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்தார் கவின். அப்போது பேசிய கமல், 'கவின் மட்டும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்திருந்தால் இறுதிப்போட்டியில் பங்கேற்றிருப்பார். நிகழ்ச்சியின் முடிவுகள் கண்டிப்பாக மாறியிருக்கும்' என்று கூறினார். உடனே ரசிகர்களும் அவரது கூற்றுக்கு ஆதரவாக கைதட்டினர். 

கவின்- கமல் பேசிய இந்த குறும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.