தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தேர்தல் முடிவு நாட்டு மக்களுக்கு ஒரு விடிவு

பத்தாண்டுகள் இந்திய அரசு, கொடுமைகளின் குவியலாக, அழிவின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலைமையில், 2014 தேர்தல்

News image
Updated On :19 மே 2014, 9:28 pm

இரா. செழியன்

பத்தாண்டுகள் இந்திய அரசு, கொடுமைகளின் குவியலாக, அழிவின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலைமையில், 2014 தேர்தல் முடிவுகள் இந்திய மக்களுக்கு ஒரு விடிவுகாலமாக வந்துள்ளன.

நடைபெற்ற தேர்தலில் முக்கியமான பங்கு மத்திய நாடாளுமன்ற அமைப்பில் இருந்தது. அகில இந்திய அளவில் நாடாளுமன்றப் பொறுப்பை ஏற்கத்தக்க அளவுக்கு இரண்டு அகில இந்திய கட்சிகள் - கூட்டணிகள் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்தன.

கடைசியாக 2004-2014 வரை காங்கிரஸ் கட்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2-ஆவது அமைப்பு) பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அரசும், அதைக்  கட்டுப்படுத்திய சோனியா காந்தி - ராகுல் காந்தி ஆகியோரின் தனிப்பட்ட ஆட்சியும் நாட்டின் அனைத்து மக்களின் கடுமையான கண்டனத்துக்கும் ஆளாகி இருந்தன.  இதனால் 2014 தேர்தல் ஒன்றுதான் மத்திய ஆட்சியை மாற்றக்கூடிய ஒரு மகத்தான வாய்ப்பாக அமைந்தது.

2014 தேர்தலில் மத்தியில் பா.ஜ.க. அக்கட்சியினரே எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய  வெற்றியை அடைந்திருக்கிறது. அது அக்கட்சிக்குக் கிடைத்த வெற்றி அல்ல. உண்மையில் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

மத்தியில் ஆட்சி அமைப்பது காங்கிரஸ் தலைமையில் அல்லது பா.ஜ.க. தலைமையில் அமையும்  கூட்டணி என்ற நிலைமைதான் 1996 முதல் தொடர்ந்தது. வி.பி.சிங் தலைமையில் அமைந்த தேசிய முன்னணி ஆட்சிதான் முன்னோடி.

இந்தத் தேர்தலிலும், நாடாளுமன்றத்தில் 150 இடங்களுக்கு மேல் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அதற்கு மற்ற காத்திருக்கும் கட்சிகளின் துணை கிடைத்துவிடும். ஆட்சி அமைந்துவிடும் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.

பா.ஜ.க. அணிக்கு மத்திய ஆட்சி அதிகாரம் கிடைக்குமென்றாலும், எந்த அளவுக்கு இந்த ஆட்சிக்கு பலம் கிடைக்கும் என்பதை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 2014 பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு முடிந்ததும், வெளிவரும் வாக்காளர்களைச் சந்தித்து ஒரு தொலைக்காட்சி சேனல் பொதுத் தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கக்கூடும் என்ற வாக்குக் கணிப்பை வெளியிட்டது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, அந்த வாக்குக் கணிப்பில், 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு 31 இடங்களும், தி.மு.க.வுக்கு 7 இடமும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கக் கூடும் என்று ஒரு சேனலும், மற்றொரு சேனல் எடுத்த வாக்குக் கணிப்பில் அ.தி.மு.க.வுக்கு 22-28 இடங்களும், தி.மு.க.வுக்கு 7-11 இடங்களும், பா.ஜ.க. கூட்டணிக்கு 4-6 இடங்களும் வரக்கூடும் என்றும் கூறின.

தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் மற்றும் தேர்தல் ஆய்வுகளும் ஒன்றை  வலியுறுத்தின. பா.ஜ.க. பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி அலை எந்தவிதத்திலும் தமிழகத்தில் பாதிப்பை உண்டாக்காது என்று தெரிவித்தன.

இருப்பினும் பா.ஜ.க. தமிழ்நாட்டில் நிலைபெறும் அளவுக்கு, அ.தி.மு.க.-காங்கிரஸ்-தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு அப்பாற்பட்ட கட்சிகளின் தலைவர்களையும், கட்சிகளையும் இணைத்து கூட்டணி அமைத்ததில் தமிழ்நாடு பா.ஜ.க. கட்சியும், அகில இந்திய பா.ஜ.க. தலைவர்களும் அடுத்தடுத்து வந்தனர். பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வருகையும், அவருக்கு வந்த கூட்டத்தினரிடையே காணப்பட்ட ஆர்வமும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரான மோடி, நான் பிரதமரானால் தமிழ்நாட்டை குஜராத் போன்று வளர்ச்சி அடையச் செய்வேன் என்று கூறினார். அது தமிழ்நாட்டுக்கு, தான் செய்யக்கூடிய எதிர்கால நன்மையையும், மக்களின் ஆதரவையும் வெளியிடுவதாக இருந்திருக்கலாம். ஆனால், மோடியின் பேச்சு தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈர்த்து, கண்டனத்தை எதிர்கொண்டது.

நரேந்திர மோடி காலத்தில் குஜராத் அடைந்த வளர்ச்சிக்கு எவ்வகையிலும் குறையாத அளவுக்கு தமிழக ஆட்சியும், மக்கள் நிலைமையும் உள்ளது என்று விரிவான புள்ளிவிவரங்களுடன் முதல்வர் விளக்கினார்.

மேலும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும், பா.ஜ.க. ஆட்சி இருந்தபோதும், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பங்கை அவை கடுமையாக எதிர்த்து வந்தன.

உச்சநீதிமன்றம் வரை தமிழ்நாட்டு முதல்வர் சென்று பாடுபட்டதன் காரணமாகவே தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் ஓரளவு கிடைத்தன என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

2014 தேர்தல் தொடங்கும் முன்பே, காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளை கடுமையாக எதிர்த்தே அ.தி.மு.க. செயல்படும் என தெளிவாக முதல்வர் ஜெயலலிதா கூறி வந்தார். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மிகவும் குறைத்துப் பேசிய மோடியின் பேச்சு, முதல்வரின் காங்கிரஸ்-பா.ஜ.க. கண்டனத்தை பல மடங்கு கடுமையாக்கியது.

மே 16-இல் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலைமையில், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள முன்னணி நிலைமைகள் தொடர்ந்து செய்தி நிறுவனங்களால் தரப்பட்டது.

அவை அளித்த வாக்குக் கணிப்புகள் அதிகபட்சமாக அ.தி.மு.க.வுக்கு 31 இடங்கள் என கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் சில மணி நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு நாடாளுமன்றத்தில் 37 இடங்கள் என்ற  எண்ணிக்கை உயர்ந்தது.

பொதுத் தேர்தல் முடிவுகளில், 543 தொகுதிகளுக்கும் தரப்பட்ட முடிவுகளில்,  பா.ஜ.க.வுக்கு 282 இடங்கள் கிடைத்து நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கடைசி முடிவு வரும் வரை முன்னிலை விவரங்களில் பா.ஜ.க. அணி, காங்கிரஸ் அணி என்றே வெற்றி நிலைமைகள் தொடர்ந்து வெளிவந்தன.

அந்த அணிகளில் எந்தெந்தக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன, அவற்றின் வெற்றி விவரங்கள் என்ன என்பது வெளிவரவில்லை. இறுதி முடிவுகளில் மட்டுமே பா.ஜ.க. 282 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. பா.ஜ.க. பெற்ற இந்த அமோக வெற்றியில், அதனுடன் அணிவகுத்து வந்த கட்சிகளின் பங்கும், ஆதரவும் குறிப்பிடவில்லை.

அ.தி.மு.க.வை பொருத்தவரை, தனித்து ஒரு கட்சியாக, அதற்கு தரப்பட்ட இரட்டை இலை சின்னத்துடன்தான் தேர்தல் போட்டி முடிவுகள் வெளிவந்தன. அக்கட்சிக்கு தோழமையுடைய சில அமைப்புகளும் ஆதரவு அளித்தன என்பது வெளிப்படையான விஷயம்.

அக்கட்சி வெற்றி பெற்ற 37 தொகுதிகளில், மொத்த வாக்குகளில் அக்கட்சிக்குக் கிடைத்தது 44.3 சதவீதம். அதேநேரத்தில் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த வாக்குகள் 5 சதவீதம் மட்டுமே. அதனுடன் இணைந்து போட்டியிட்ட பா.ம.க.வுக்குக் கிடைத்தது 3.9 சதவீதம்தான்.

முன்எப்போதும் இல்லாத அளவுக்கு 3ஆவது தனிப்பெரும் கட்சியாக மக்களவையில் அ.தி.மு.க. இடம்பெற்றுள்ளது.

மாநில அளவில் மட்டுமின்றி நாடாளுமன்ற அமைப்பில் ஒரு மாநிலக் கட்சிக்கு இத்தகைய வெற்றி கிடைத்தது ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சாதனையாகும்.

அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த வெற்றி தமிழ்நாட்டு மக்களின் வெற்றி என்றும், தற்போதுள்ள நிலைமையில் மத்திய அரசு, மாநில அரசுக்கு ஆக்கப்பூர்வமான முறையில் துணை நிற்கும் என்றும் தமிழ்நாடு முதல்வர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

இருண்ட காலத்துக்குப் பிறகு இந்திய மக்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளது. இதை காப்பாற்றும் பொறுப்பும், உரிமையும் மக்களிடம்தான் உள்ளது.

கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.