கலைமகள் வழிபாடும் பெண் கல்வியும்
இந்த ஆண்டு அக்டோபர் 2 - 3 நாள்களில் கல்வி தெய்வமான சரஸ்வதிக்கு கோலாகலமாக விழா கொண்டாடப்பட்டது.


இந்த ஆண்டு அக்டோபர் 2 - 3 நாள்களில் கல்வி தெய்வமான சரஸ்வதிக்கு கோலாகலமாக விழா கொண்டாடப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, மாணவர்களின் புத்தகங்களும், குடும்பத்தினரின் குறிப்பேடுகளும் அடுக்கப்பட்டு, பொட்டு வைக்கப்பட்டு பூமாலை போடப்பட்டு, ஆராதனை செய்யப்பட்டது.
தொழிலகங்களில் உள்ள இயந்திரங்களுக்கும் ஓய்வு தரப்பட்டு அவற்றுக்குத் தொடர்புள்ள ஆயுதங்களுக்கும் பூஜைகள் போடப்பட்டன.
கல்வி தெய்வமான கலைமகளுக்கு எடுக்கப்படும் வழிபாடு வேறு வகையில் இருக்க வேண்டும் என தேசியக் கவி பாரதியார் கருதி, தமது பாட்டின் மூலம் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்
செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்,
வாழி யதிஃங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம்.
பாரதியார் கருத்தோட்டத்தில், கல்வி தெய்வத்துக்கு எடுக்கும் ஆராதனையில் கல்வி ஏடுகளை அடுக்கி சந்தனத்தையும் மலர்களையும் அடுக்குவது கூடாது என ஆயிற்று.
கல்வி தெய்வத்தை வழிபடுவதில் என்ன செய்யவேண்டும் என்று பாரதியார் அடுத்த செய்யுளில் எழுதினார். வீதி தோறும் இரண்டொரு பள்ளி; நாடு முற்றிலும் பலபல பள்ளிகள, ஏடு இல்லாத ஊரைத் தீக்கிரை ஆக்குவோம்.
கல்வி தருவதற்கான பள்ளி இல்லாத ஊரை தீவைத்து அழிப்பதைத் தவிர வேறு வழி பாரதியாருக்கு புலப்படவில்லை.
பாரசீகம், யவனம், சீனம் போன்ற பல நாடுகளில் பரந்து கிடக்கும் கல்வி தேவியின் ஒளி பரத கண்டத்தில் வராதது ஏன் என்று பாரதியார் மனம் நொந்து போனார்.
கடைசியாக நாட்டு மக்களுக்கு பாரதியார் விடுத்த ஆணையானது,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்;
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்
ஒரு நாட்டில் உள்ள செல்வச் சீமான்கள், தான தருமம் செய்யும் கோடீசுவரர்கள், ஆலயங்களையும் அன்னசத்திரங்களையு கட்டி வைப்பதால் உண்டாகும் புண்ணியத்தைவிட ஒரு ஏழைக்கு தரப்படும் கல்வியால் உண்டாகும் புண்ணியம் பெரிது என்று பாரதியார் அழைப்பு விடுத்தார்.
பள்ளி இல்லாத ஊரை எரித்திட, ஏழைக்குக் கல்வி தராத அரசாங்கத்தை எடுத்தெரிய, பாரதியார் போன்ற தேசியக் கவிஞர் நம்மிடையே இப்பொழுது இல்லையே.
கடந்த அக்டோபர் 2, கலைமகள் தெய்வத்துக்கான ஆராதனை நாள் மட்டுமல்ல, பாரதியார் பாடிய "தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி' பிறந்த நன்னாளாகவும் இருந்தது.
அடிமைத் தளையிலிருந்து இந்திய மக்கள் விடுதலை பெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் மாபெரும் போராட்டங்களை மகாத்மா காந்தி நடத்தியது மட்டுமல்ல, இந்திய சமுதாயத்தில் அடிமைகளாக வாழும் பெண்களுக்கும் விடுதலை தரப்பட வேண்டும் என்றும் அவர் பாடுபட்டார்.
பெண்களின் நல்வாழ்வுக்கான ஜோதி சங் என்ற அமைப்பினர், இந்தியாவில் பெண்ணடிமை இருப்பது குறித்து அண்ணல் காந்திக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பினார்கள்.
அதற்கு பதிலாக, தம்முடைய குஜராத்தி பத்திரிகையில் 1931, மே 31 மகாத்மா நீண்ட கட்டுரை ஒன்று எழுதினார். குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு மத்திய அரசாங்கத்தின் வெளியீட்டு அமைப்பினால் மகாத்மா காந்தியின் தொகுப்பு நூல்கள் மூலம் தரப்பட்டுள்ளது.
1958-இல் துவங்கி 1992-இல் முடிவடைந்த நூற்றுக்கு மேற்பட்ட தொடர் பகுதிகள் மொத்தம் 43,000 பக்கங்கள் அளவில் வெளிவந்தன.
மேலே குறிப்பிடப்பட்ட பெண்கள் நல்வாழ்வு பற்றி மகாத்மா காந்தி எழுதிய கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 61-ஆவது தொகுப்பில் 123 - 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. அதில் மகாத்மா காந்தி அவர்கள் தந்த முக்கியமான சில கருத்துகள்:
ஒரு கணவன் அனுபவிக்கும் எல்லாவிதமான உரிமைகளும் அவனுடைய மனைவிக்கும் இருக்கின்றன என்பதில் சிறிது கூட சந்தேகம் இல்லை. அவர்களின் கடமைகள் வேறுபட்டிருக்கின்றன என்றாலும், அவர்களுடைய உரிமைகளில் எந்த வேறுபாடும் இல்லை.
இருவரும் இணைந்து வாழவேண்டும் என்பதால், ஒத்துழைப்பும் ஒன்றுபட்ட சமத்துவமும் இருக்க வேண்டும். கணவன், "உன்னுடைய எஜமான் நான். நீ என்னுடைய சொத்து.
நான் சொல்கிறபடிதான் நீ பணிவாக நடந்து கொள்ளவேண்டும்' என்று கூறினால், அப்படிப்பட்ட நிலைமையில் கணவனுக்கு எதிராக மனைவி ஒரு சத்தியாகிரகத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான் என்று நான் நினைக்கிறேன்.
இந்திய மக்களுக்கு அரசியல் முறையில் ஏற்பட்டிருந்த அடிமைத்தனத்தை நீக்கிட சத்தியாகிரக முறையை மகாத்மா காந்தி பயன்படுத்தினார். அதேபோல் சமுதாயத்தில் அடக்கப்பட்ட பெண்களின் நல்வாழ்வுக்கு மற்றொரு சத்தியா கிரகத்தை பயன்படுத்த அவர் முற்பட்டார்.
அரசியல் நிர்ணய சபையின் மூலம் முடிவுகள் எடுக்கப்பட்டு, 1962, பிப்ரவரி 26 முதல் செயல்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம், காந்தியார் வலியுறுத்திய கிராம சுயராஜ்யம் அடிப்படையில் இந்திய ஆட்சிமுறை அமைக்கப்படவில்லை.
ஆயினும் 1992-இல் நிறைவேற்றப்பட்ட 73-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, கிராம - நகர - மாவட்ட அளவுக்குப் பஞ்சாயத்து முறை உருவானது.
அதில் ஒரு பகுதியாக, தேர்தல் மூலம் வரும் மொத்தமுள்ள பஞ்சாயத்து உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாமல், பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டது.
அதேபோல் மாநில சட்டப்பேரவையிலும் மாநில மேலவை இருந்தால் அதிலும் - நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாமல் பெண்களுக்கு வாய்ப்புகளை ஏன் தரக்கூடாது?
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணிப்புகளின்படி - கடைசியாக வந்த 2011 இந்திய மக்கள்தொகை அளவில் ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக 940 பெண்கள் எண்ணிக்கை இருக்கிறது. அந்த அளவுகளை ஒட்டி சட்டமியற்றும் அவைகளில் பாதியளவுக்கு நெருக்கமாக பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படலாம்.
இதற்கு மேலாக பள்ளிகளிலும் உயர்நிலை கல்வி அமைப்புகளிலும் பெண்களுக்குத் தக்க இடங்களை ஒதுக்க வேண்டும்.
ஆண்டுதோறும் கல்வியின் தெய்வத்துக்கு விழா எடுக்க இந்திய மக்கள் தவறுவதில்லை. ஆனால், அறிவார்ந்த கல்வி வளர்ச்சியில் சுதந்திர இந்தியா மிகவும் பின்தங்கிய நாடாக ஆகி விட்டது.
ஓர் ஆண் உயர் கல்வி பெற்றால், அவனுடைய குடும்பத்தின் எதிர்காலம் வளமுள்ளதாக ஆகிவிடும். தக்க அளவில் ஒரு பெண்ணுக்கு உயர் கல்வி தரப்பட்டால், அது ஒரு குடும்பம் மட்டுமல்ல, ஒரு பரம்பரையே வளர்ச்சி அடைய உதவும்.
கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...