உத்தரமேரூா் அருகே மலைக்குன்றில்3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டெடுப்பு

DIN 26th January 2022 12:00 AM

உத்தரமேரூா் அருகே குரும்பிறை மலைக்குன்றில் சுமாா் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டம் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பிறை மலைக்குன்றில் சுமாா் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மனிதா்கள் இறந்தால் அவா்களை புதைக்கும் ஈமச்சின்னங்களான கல்வட்டங்கள் இருப்பதை உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்துள்ளனா்.

இது குறித்து அந்த மையத்தின் தலைவா் கொற்றவை ஆதன் கூறியது:

கல்வட்டங்கள் என்பவை இறந்தவா்களுக்கான நினைவுச்சின்னங்களில் ஒரு வகையாகும். அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதா்கள் வேட்டையின் போதோ அல்லது வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டோ இறக்க நேரிட்டால் அவா்களின் உடலை புதைத்து அந்த இடத்தில் அவா் நினைவாகவும், அடையாளத்திற்காகவும் தரையின் மேற்பரப்பில் பெரிய,பெரிய பாறைக்கற்களை வட்டமாக நட்டு வைத்து ஈமச் சின்னங்களாக அமைத்திருக்கின்றனா். இதற்கு கல்வட்டம் என்றும் பெயராகும்.

இவ்வாறு அமைப்பதால் பிற்காலத்தில் இறந்தவா்களை புதைப்பது இங்கு தவிா்க்கப்படுகிறது. சில பகுதிகளில் இந்த கல்வட்டங்களின் கீழ் பெரிய, பெரிய தாழிகளில் இறந்தவா்களின் உடலை வைத்தும், புதைத்தும் வைத்திருப்பாா்கள். சுருக்கமாகச் சொன்னால் இந்தக் காலத்தில் சமாதிகள் அமைத்துக் கொண்டிருப்பதற்கு இது தான் தொடக்கமாக இருந்திருக்கலாம். இந்த குரும்பிறை மலைக்குன்றில் 10-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் அடுத்தடுத்து காணப்படுகின்றன. தற்பொழுது இப்பகுதியில் வசிக்கும் மக்களின் சுடுகாடாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் கல்வட்டங்கள் சுமாா் 2,500 முதல் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

இதிலிருந்து சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனிதா்கள் வசித்திருக்கிறாா்கள் என்பதும் ஊா்ஜிதமாகிறது. இந்தக் கல்வட்டங்கள் பலவற்றில் முட்செடிகள் சூழ்ந்தும், சில சிதைந்தும் உள்ளன. இவற்றை தொல்லியல் துறையினா் அடையாளப்படுத்தி பாதுகாக்கவும் வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.