5 ஆட்டங்களில் 4 சதங்கள்: மீண்டும் திறமையை நிரூபித்த ருதுராஜ் கெயிக்வாட்!

விஜய் ஹசாரே போட்டியின் ஒரே பருவத்தில் 4 சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ருதுராஜ் இணைந்துள்ளார்.
5 ஆட்டங்களில் 4 சதங்கள்: மீண்டும் திறமையை நிரூபித்த ருதுராஜ் கெயிக்வாட்!
Published on
Updated on
1 min read

விஜய் ஹசாரே போட்டியில் மஹாராஷ்டிர வீரர் ருதுராஜ் கெயிக்வாட் மற்றுமொரு சதத்தை அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இந்திய இளம் தொடக்க வீரர்களில் பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல்லை விடவும் மிகத்திறமையானவர் என்கிற நம்பிக்கையை ஐபிஎல் 2021 போட்டியின் முடிவில் பெற்றார் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த ருதுராஜ் கெயிக்வாட். ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 24 வயது ருதுராஜ் முதலிடம் பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் (24) ஆரஞ்ச் தொப்பியைப் பெற்றவர் என்கிற பெருமையையும் அடைந்தார். மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த ருதுராஜ். இந்திய அணிக்காக இலங்கையில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணியில் இடம்பெற்றார். 

ஐபிஎல் போட்டியை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ருதுராஜ், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலும் நன்கு விளையாடினார். தற்போது, விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் அதை விடவும் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளார். தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து அசத்திய ருதுராஜ் இன்று மற்றுமொரு சதத்தை அடித்துள்ளார். அதாவது 5 ஆட்டங்களில் 4 சதங்கள்!

ராஜ்கோட்டில் நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் மஹாராஷ்டிரம் - சண்டிகர் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. மனன் வோஹ்ரா 141 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதையடுத்து விளையாடிய மஹாராஷ்டிர அணியில் அதன் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், மீண்டும் பெரிய சதமடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். இலக்கை நெருங்கும் சமயத்தில் 132 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 168 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் விஜய் ஹசாரே போட்டியின் ஒரே பருவத்தில் 4 சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ருதுராஜ் இணைந்துள்ளார்.

விஜய் ஹசாரே: ஒரே பருவத்தில் 4 சதங்கள் அடித்த வீரர்கள்

4 சதங்கள் -  விராட் கோலி 2008/09
4  சதங்கள் -  தேவ்தத் படிக்கல் 2020/21
4  சதங்கள் -  பிருத்வி ஷா 2020/21
4  சதங்கள் -  ருதுராஜ் கெயிக்வாட் 2021/22

சமீபகாலமாக விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ருதுராஜ் தேர்வாக வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com