விராட் கோலி: ஓய்வா, நீக்கமா?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் கோலி இடம்பெறாதது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
விராட் கோலி: ஓய்வா, நீக்கமா?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் கோலி இடம்பெறாதது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடரில் கோலி, பும்ரா, சஹால் ஆகியோர் ஓய்வு காரணமாக அணியில் இடம்பெறவில்லை. 18 பேர் கொண்ட அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார். காயம் காரணமாக இங்கிலாந்து தொடர்களில் இடம்பெறாத கே.எல். ராகுல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

கடந்த நவம்பருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பெறாத தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின், மே.இ. தீவுகள் டி20 தொடருக்குத் தேர்வாகியுள்ளார். குல்தீப் யாதவ், ரவி பிஸ்னாய், அக்‌ஷர் படேல், ஜடேஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளார்கள். மே.இ. தீவுகள் ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட பாண்டியா, ரிஷப் பந்த் டி20 தொடருக்குத் தேர்வாகியுள்ளார்கள். அணியில் உம்ரான் மாலிக்குக்கு இடமில்லை. அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் தேர்வாகியுள்ளார். ராகுலும் குல்தீப் யாதவும் தங்களுடைய உடற்தகுதியை நிரூபிக்கவேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 22 அன்றும் டி20 தொடர் ஜூலை 29 அன்றும் தொடங்குகின்றன. 

இந்திய அணியின் தேர்வு குறித்து பிசிசிஐ அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. காயம் காரணமாக கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகவே பிசிசிஐ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டாலும் இந்த நிலை பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சதமடிக்காமல் உள்ள விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 தொடரில் இரு ஆட்டங்களில் 1,11 எனக் குறைவான ரன்களே எடுத்தார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்திய டெஸ்ட் அணியிலிருந்து அஸ்வினை நீக்கமுடியும் என்றால் கோலியையும் நீக்கலாம் என முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் இதேபோல பேசியுள்ளார்கள்.

டி20 அணியில் நடுவரிசை வீரர்களாக விளையாடி வரும் தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களை அணியிலிருந்து நீக்க வழியில்லாமல் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கோலி இல்லாத இந்திய அணி எப்படி விளையாடுகிறது என்பதை அறிய ஒரு வாய்ப்பாகவும் மே.இ. தீவுகள் டி20 தொடர் பார்க்கப்படுகிறது. இந்தக் காரணங்களால் இந்திய டி20 அணியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டதாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் சிலர் கூறியுள்ளார்கள். இதனால் ஓய்வு எனக் கூறிக்கொண்டு விராட் கோலி அணியிலிருந்து நீக்கப்பட்டாரா என்றும் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.

மே.இ. தீவுகள் டி20 தொடரில் இந்திய அணியில் கோலி இடம்பெறாதது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்தால் மட்டுமே இந்தக் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com