தமிழ்நாடு

விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

DIN

மறைந்த விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேடு தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேமுதிக தலைவரும், எதிா்க்கட்சி முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானாா். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் இன்று வைக்கப்பபட்டிருந்தது. ஏராளமான மக்கள் அலைகடல் என திரண்டு வந்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 

வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீருடன் விஜயகாந்தை வழியனுப்பி வைத்தனர். விஜயகாந்தின் இறுதி ஊர்வல வாகனத்தில் அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் உள்ளிட்டோர் இருந்தனர். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தொண்டர்கள், கேப்டன், கேப்டன் என முழுக்கமிட்டனர். கேப்டனுக்கு வீர வணக்கம் எனவும் முழக்கமிட்டபடி தொண்டர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். மேலும் இறுதி ஊர்வலம் செல்லும் சாலையில் விஜயகாந்தின் பேனர்கள் பதாகைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. 

இறுதி ஊர்வலத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மக்கள், தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் பிரியா விடை கொடுத்தனர். விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை எழும்பூர், வேப்பேரி வழியாக கோயம்பேடு வந்தடைந்தது. மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயம்பேடு தேமுதிக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து விஜயகாந்தின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு நடைமுறை செய்தனர். விஜயகாந்தின் கால்களைத் தொட்டு வணங்கி அவரது மனைவி பிரேமலதா இறுதி மரியாதை செலுத்தினார். அனைத்து சடங்குகளும் முடிந்து இறுதியாக இரவு 7 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் செல்போனை ஒளிரவிட்டு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்பு கருதி விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் 200 பேருக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்தது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கை மக்கள் காணும் வகையில் 8 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டன. இறுதிச் சடங்கை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் பெரிய எல்இடி திரைகள் வைக்கப்பட்டன. 

சந்தனப் பேழையில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் வாசகம்
50 கிலா எடைக் கொண்ட சந்தன கட்டையில் தயாரித்த பிரத்யேக பேழையில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  அடக்கம் செய்யப்பட்ட சந்தனப் பேழையில் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. மேலும் நிறுவனத் தலைவர் தேமுதிக எனவும் விஜயகாந்தின் பிறப்பு, இறப்பு தேதிகளும் பேழையில் இடம்பெற்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு தாக்கல்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

SCROLL FOR NEXT