விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்தார் நீதிபதி: உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை - Dinamani - Tamil Daily News

விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்தார் நீதிபதி: உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை

First Published : 27 January 2013 02:45 AM IST


இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏதேனும் இடம்பெற்றுள்ளனவா என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் பார்த்தார்.

நீதிபதி இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் சனிக்கிழமை பிற்பகல் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் படம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு திங்கள்கிழமை (ஜனவரி 28) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

படத்துக்கு தடை விதிக்கக் கோரி மாநில உள்துறைச் செயலாளரிடம் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து சென்னையில் இரண்டு வார காலத்துக்கு விஸ்வரூபம் படத்தை திரையரங்குகள் வெளியிடக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

இதுபோன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பிறப்பித்தனர்.

விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி, அந்தப் படத்தைத் தயாரித்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் பங்குதாரர்களில் ஒருவரான எஸ். சந்திரஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு குறித்து கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்கின் விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (ஜனவரி 28) ஒத்திவைத்து உத்தரவிட்டார். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு, அதன் பிறகு விரிவான விசாரணை நடத்தி மனு மீது தீர்ப்பளிப்பதாக நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் சனிக்கிழமை சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. பிற்பகல் 1 மணி முதல் நீதிபதி கே. வெங்கட்ராமன் திரைப்படத்தைப் பார்த்தார். அவருடன் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜி. சொக்கலிங்கம், அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் பி.எச். அரவிந்த் பாண்டியன், அரசு வழக்குரைஞர் எஸ். வெங்கடேஷ், மனுதாரர் சந்திரஹாசன், அவர் தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், வழக்குரைஞர் சதீஷ் பராசரன், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு, விஸ்வரூபம் படம் பார்ப்பதற்காக திரையரங்கில் டிக்கெட் வாங்கியவர்கள் சார்பில் வழக்குரைஞர் ஸ்டாலின் அபிமன்யூ, கமல் ரசிகர்கள் சார்பில் வழக்குரைஞர் ராஜசேகர் உள்ளிட்டோரும் படத்தைப் பார்த்தனர்.

படம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி பார்ப்பதற்காக விஸ்வரூபம் படத்தின் சிறப்புக் காட்சி சனிக்கிழமை திரையிடப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினர் சார்பிலும் அவர்களது வழக்குரைஞர்கள் நீதிபதியுடன் இந்தப் படத்தைப் பார்த்தனர்.

திரைப்படம் குறித்து இப்போது எதுவும் கூற இயலாது. வரும் திங்கள்கிழமை (ஜனவரி 28) நடைபெறும் விசாரணையின்போது எங்கள் தரப்பு கருத்தை நீதிமன்றத்தில் எடுத்து வைப்போம் என்றார்.

மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு கூறும்போது, இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தக்கூடிய பல காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளன. நீதிபதியும் இந்தப் படத்தைப் பார்த்து விட்டதால் திங்கள்கிழமை (ஜனவரி 28) நடைபெறும் விசாரணையின்போது எங்கள் தரப்பு நியாயத்தை நீதிபதியிடம் விளக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும் என்றார்.

இந்தப் பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.