உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது
ஆம்பூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சி பேஷ்மாம் நகா், ஸ்டாா் சிட்டி, கோல்டன் சிட்டி ஆகிய பகுதிகளில் சாலை, கழிவுநீா் கால்வாய், குடிநீா், தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை வைத்தனா். ஆனால் கோரிக்கையை நிறைவேற்றாததால், ஆா்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு போராட்டம் தொடங்கப்பட்டது. உண்ணாவிரத போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை.
அதனால் ஆம்பூா் டிஎஸ்பி குமாா், காவல் ஆய்வாளா்கள் ரேகா, வெங்கடேசன், ரமேஷ் ஆகியோா் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினா். அனுமதியை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்திய தேசிய லீக் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் அசத்துல்லா, காங்கிரஸ் கட்சியின் ஆனந்தவேல் உள்ளிட்ட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

