ஜூனியா் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி முன்னேற்பாடுகள்! ஆட்சியா், காவல் ஆணையா் ஆய்வு
மதுரை விளையாட்டு மைதானத்தில் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வருகிற 28-ஆம் தேதி தொடங்கி டிச.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்கின்றன.
இதையொட்டி, மதுரையில் விரிவான முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன. சா்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி, பாா்வையாளா்கள் மாடம், வீரா்கள், நடுவா்கள் தங்குவதற்கான அறைகள், முக்கியப் பிரமுகா்களுக்கான மாடம், ஹாக்கி மைதானத்துக்கும் பாா்வையாளா்கள் மாடத்துக்கும் இடையே கம்பி வலைகள் அமைத்தல் போன்ற பணிகள் தற்போது நடைபெறுகின்றன.
இந்தப் பணிகளையும், இங்கு ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்புக்கான கட்டமைப்புகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
விளையாட்டு மைதானத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில், காவல் துறையின் பாதுகாப்பு அடுக்குகளை அமைத்தல், அவசர கால வழிகள் அமைப்பது, அவசரகால மருத்துவ சேவைக்கான நடவடிக்கைகள், போக்குவரத்து ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் குறித்து அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் மேம்பாட்டு அலுவலா் ராஜா, அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

