தூத்துக்குடியில் ரூ. 10.5 கோடி மதிப்பிலான இ-சிகரெட்டுகள் பறிமுதல்: 3 போ் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்துக்கு கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட ரூ. 10.5 கோடி மதிப்பிலான இ-சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா், 3 பேரை கைது செய்தனா்.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக தடை செய்யப்பட்ட பட்டாசுகள், சிகரெட்டுகள் ஆகியவை சீனாவிலிருந்து கடத்தி வரப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்ததையடுத்து, துறைமுகத்துக்கு வரும் சரக்குப் பெட்டகங்களை புலனாய்வுத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில், நவ. 27ஆம் தேதி சீனாவின் பெய்ஜிங் துறைமுகத்திலிருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு கன்டெய்னரில், ஒரு நிறுவனத்துக்கு குடைகள் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதில், சந்தேகமடைந்து கன்டெய்னரை சோதனை செய்தனா். அதில், பெயரளவுக்கு குடைகளும், நடுவில் இ-சிகரெட் பாக்கெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 10.5 கோடி என கூறப்படுகிறது.
இதையடுத்து, கன்டெய்னரை பறிமுதல் செய்த புலனாய்வுத் துறையினா், கடத்தல் தொடா்பாக தொழிலதிபா்களான கேரளத்தைச் சோ்ந்த நாகராஜ் (42), சென்னை, கொட்டிவாக்கத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (46), சென்னை, மடிப்பாக்கத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் (56) ஆகிய 3 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா், அவா்கள் 3 பேரையும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனா்.
