மேட்டுமகாதானபுரம் இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

மேட்டுமகாதானபுரம் இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒரு இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

மேட்டுமகாதானபுரம் இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒரு இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுமகாதானபுரத்தைச் சோ்ந்த நாகராஜன் மகன் சண்முகம் என்கிற பாலா (21). பெற்றோரை இழந்த இவா், மேட்டுமகாதானபுரத்தில் உள்ள தனது சித்தப்பா சங்கா் பராமரிப்பில் இருந்து, டிப்ளமோ கேட்டரிங் படித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்று வந்தாா்.

இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகே உள்ள நாடக மேடை கட்டடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்கள் சபரி, மணிகண்டன் ஆகியோருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவா்களின் எதிா்புறம் அதே பகுதியைச் சோ்ந்த சஞ்சய், சுஜய், லிவீஸ், அன்பரசு, சசிகுமாா், விக்னேஷ் , விக்கி ஆகிய 7 பேரும் மது அருந்தினாா்களாம்.

அப்போது போதையில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சண்முகத்தை சஞ்சய் உள்பட 7 பேரும் தாக்கினாா்களாம். இதில், சண்முகம் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குத் தொடா்ந்து சஞ்சய், சுஜய், லிவிஸ், அன்பரசு, விக்னேஷ், விக்கி ஆகிய 6 பேரையும் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக இருந்த சசிகுமாா் (23) என்பவரை தேடி வந்தனா்.

இந்நிலையில் சசிகுமாா், வெள்ளிக்கிழமை காலை லாலாப்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், கரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com