விவசாயம்

'கலப்பு பண்ணையம், கலப்பு வேளாண்மை திட்டங்கள் தேவை'

தினமணி

தமிழகத்தில் கலப்புப் பண்ணையம் மற்றும் கலப்பு வேளாண்மைத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்த வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.
நபார்டு வங்கியின் மாநில அளவிலான கடனுதவிக் கருத்தரங்கம், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் 2017 - 2018-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டுக்கான கடனுதவி அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், 2017 - 2018-ஆம் ஆண்டில் தமிழகத்தில் ரூ.1.90 லட்சம் கோடிக்கு கடன் வழங்க வாய்ப்புள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், விவசாயத் துறைக்கு ரூ.1.20 லட்சம் கோடி, மத்திய சிறு, குறு தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.35,836 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதர தொகை முன்னுரிமை பிரிவுகளுக்கு கடனாக வழங்கப்படும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும்.
நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது:
மத்திய அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான வருவாயை இரட்டிப்பாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அறிவித்துள்ளது. நம்முடைய நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்று 5 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே, 5 வகை நிலங்களுக்கு ஏற்றாற்போல் தனித்தனியாக வேளாண்மைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுதவி அவர்களுக்கான கடவுச்சீட்டு போன்றது. எனவே, குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் உதவி அளிப்பது அவர்களின் வெற்றிக்கு அதிக பங்களிப்பை அளிக்கும்.
மலேசியாவில் தென்னை மரங்களுக்கு இடையே அன்னாசி பயிரிடப்படுகிறது. அதே ஒருங்கிணைந்த கலப்பு பண்ணையம் மற்றும் கலப்பு விவசாய முறைகளை தமிழகத்திலும் அதிகம் பின்பற்ற வேண்டும்.
விவசாயத்தில் நஷ்மடைந்து உயிரிழக்கும் விவசாயிகளுக்குப் பிறகு அவர்களிடம் குடும்பத்தை வழிநடத்துவதற்கு வழியில்லாமல் போய்விடுகிறது. எனவே, பெண்களுக்கும் விவசாயிகளுக்கு வழங்கும் கிசான் கடன் அட்டை, வங்கிகளில் கடனுதவி உள்ளிட்டவை அளிக்க வேண்டும். பெண்கள், இளைஞர்கள் என்று தனித்தனியாக வேளாண் துறை சார்ந்த உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், பருவநிலை மாற்றம் விவசாயிகளுக்கு பெரிய சவாலாக உள்ளது. எனவே, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றாற்போல் வேளாண்மையைப் பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT