நகைச்சுவை நடிப்பில் பெருமளவு ரசிகர்களை ஈர்த்தவர் மிஸ்டர் பீன். அவரது முழு பெயர் 'பீன் ரோவன் செபாஸ்டின் ஆட்கின்சன்'. மின்பொறியியல் பட்டம் பெற்ற இவர், ரேடியோ ஜாக்கியாகப் பணியைத் தொடங்கினார். வேடிக்கையான பேச்சுகள் வாயிலாக, லட்சக்கணக்கான நேயர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தார்.
1981-இல் இங்கிலாந்தில் நகைச்சுவைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசைப் பெற்றார். அதன்பின்னர், அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறத் தொடங்கினார். ஒரு தொலைக்காட்சியில் அவர் தயாரித்து நடித்த நகைச்சுவைத் தொடர் நாள்தோறும் இரு கோடி மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டது. புகழுடன் இருக்கும்போதே நடிப்பில் அவர் ஓய்வு பெற்றார்.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
காமராஜர் ஒரு ஊருக்குப் பயணம் செய்தார். அப்போது அவருடைய காலணி அறுந்துவிட்டது. காலணிகளை வாங்க ஒரு கடைக்குப் போனார்.
உடனே கடைக்காரர் காலணிகளைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். அப்போது கடைக்காரர், 'ஐயா.. உங்களோடு சேர்ந்து போட்டோ எடுக்கணும்னு ஆசை. அதனால் போட்டோ ஸ்டூடியோவுக்கு ஆள் அனுப்பியிருக்கேன். கொஞ்சம் பொறுங்க..' என்றார்.
உடனே காமராஜருக்கு கோபம் வந்து, 'நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை. சாதாரண ஆள்தான். இப்படி விளம்பர ஆசையெல்லாம் வேணாம்ன்னேன்...' என்றார்.
மாயூரம் வேதநாயகத்தின் அறிவுத்திறனையும் நற்பண்புகளையும் கண்டறிந்தார் தென் மண்டல நீதிமன்ற நடுவராக இருந்த மேஸ்தர் கார்டன். இதன்பின்னர், 1848-இல் ஆவணக் காப்பாளர் பணியைப் பெற்றார் வேதநாயகம். ஊக்கத்துடனும், கடமை உணர்வுடனும் உழைத்த அவர் தனது ஆங்கிலப் புலமையால் 1850-இல் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளரானார். நீதிமன்றப் பணிகள், தீர்ப்புகள் இன்றைக்குத் தமிழில் நடைபெறுவதற்குக் காரணம் வேதநாயகம்தான்.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்தபோதே திரையுலகில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற வேட்கையில் இருந்தார் பஞ்சு அருணாசலம். இரவில் கதை எழுதுவதும், அதற்குப் பாடல்களை எழுதுவதுமாக இருந்தார். பல தயாரிப்பாளர்களிடம் கதைகளையும் சொன்னார். பத்துப் படங்களுக்கு மேல் வாய்ப்புகள் வந்தும், அவை பாதியிலேயே நின்றுவிட்டன. கதையைவிட பாடல்கள்தான் கை கொடுத்தன. முதல் பாடல் 'சாரதா' எனும் படத்தில், 'மணமகளே .. மருமகளே வா.. வா' என்பதாகும்.
கண்ணதாசனின் முதல் மனைவியின் பெயர் பொன்னழகி. பெயருக்கு ஏற்றவாறு அழகு, பாசம் நிறைந்த மனைவி. மிகவும் உயிராய் நேசித்துவந்தார். 'பாலும் பழமும்' எனும் திரைப்படத்தில் பாடல் எழுதும்போது, மனைவியை நினைவில் கொண்டு, 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி...' என்று தொடங்கி, 'அழகைப் பார்த்திருப்பாயே.. உறங்க வைத்து விழித்திருப்பாயே...?' என்று எழுதினார்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
'நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் என் வீட்டிலேயே கிடப்பான். திடீரென்று நடுராத்திரியில வந்து நின்னுட்டு,' எனக்கு உப்புமா வேணும், ரவா தோசை வேணும்'ன்னு உரிமையாகக் கேட்பான். எனக்கும் அவனுக்கும் அவ்வளவு நட்பு. டேய் விசு... நீ எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ரொம்ப அருமையா டியூன் போடுறே. எனக்கு சுமாரா போடுறேன்னு சண்டை போடுவான். அவனுக்கு நான் போட்ட பாட்டுல எனக்கு ரொம்பப் பிடிச்சது, 'பிறக்கும்போதும் அழுகின்றான்... இறக்கும்போதும் அழுகின்றான்' பாட்டு. இந்தப் பாட்டைப் பத்திச் சொல்றப்ப ஒரு சம்பவத்தைச் சொல்லணும்.
இந்தியா - பாகிஸ்தான் யுத்த நிதி கொடுக்குறதுக்காக, தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் சிவாஜி தலைமையில் தில்லிலிக்குப் போயிருந்தோம். சந்திரபாபுவும் வந்திருந்தான். அப்போ குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கோம்னு கேள்விப்பட்டதும் எங்களைச் சந்திச்சார் அவர்.
அப்போ அவர் முன்னால 'பிறக்கும்போதும் அழுகின்றான்... இறக்கும்போதும் அழுகின்றான்' பாட்டை சந்திரபாபு பாடிக் காட்டினான். டாக்டர் ராதாகிருஷ்ணன் பாட்டை ரொம்ப ரசிச்சுக் கேட்டுட்டு இருந்தப்ப, இவன் என்ன பண்ணான் தெரியுமா?
பாடிக்கிட்டே சர்ருனு தாவிப்போய் அவர் மடியில உட்கார்ந்துட்டு, அவர் தாவாங்கட்டையைப் பிடிச்சுக்கிட்டு, 'நீ பெரிய ஞானஸ்தன்'னு சொல்லிட்டான். நாங்க பதறிப் போயிட்டோம். ஆனா, டாக்டர் ராதாகிருஷ்ணன் சிரிச்சுட்டே, அவனை அணைச்சுக்கிட்டார்'.
ஒருநிகழ்ச்சியில் நடிகர் சந்திரபாபு குறித்து இசையமைப்பாளர் எம்.எஸ் விசுவநாதன்.
நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் நடிப்புக்கு முதலில் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவருடைய தந்தை ராஜவேலு. தந்தையின் 'கலாட்டா கல்யாணம்' எனும் நாடகத்தின் வாயிலாக, சீனிவாசன் நடிக்கத் தொடங்கினார். 'கல் மணம்' எனும் நாடகத்தில், தேங்காய் விற்கும் சிறுவனாக நடித்த சீனிவாசனின் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்தப் படத்தைப் பார்க்க வந்த திரையுலகப் பிரபலம் தங்கவேலு, சீனிவாசனுக்கு தேங்காய் சீனிவாசன் என்று பட்டப் பெயரைச் சூட்டி அழைக்க, அதுவே நீடித்துவிட்டது. ஏவி.எம். தயாரிப்பில் வெளியான 'காசே தான் கடவுளடா?' என்ற படத்துக்காக, தேங்காய் சீனிவாசனுக்காக கட்அவுட்டுகள் வைக்கப்பட்டன.
-எம் அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.