முகப்பு
பெங்களூரு

'சென்னை போல கெட்டுப்போச்சு பெங்களூரு...' : ஆட்டோ பயணிகள் புலம்பல்

பெங்களூர், ஜன. 11: பெங்களூரு நகரில் ஆட்டோவில் பேரம் பேசாமல் ஏறுவதும், மீட்டர் காட்டும் தொகையை தந்துவிட்டுப் போவதும் ஒரு கனவாகவே மாறி விட்டது. ஆட்டோ சவாரிக்கு வருமா? என்று கேட்டால், 100 ரூபாய் ஆகும் என

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:06 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 7:40 PM

பெங்களூர், ஜன. 11: பெங்களூரு நகரில் ஆட்டோவில் பேரம் பேசாமல் ஏறுவதும், மீட்டர் காட்டும் தொகையை தந்துவிட்டுப் போவதும் ஒரு கனவாகவே மாறி விட்டது.

ஆட்டோ சவாரிக்கு வருமா? என்று கேட்டால், 100 ரூபாய் ஆகும் என்கிறார் ஆட்டோக்காரர். மீட்டர் போடுங்கள் என்றால், ஆட்டோ வராது என்ற பதில் வருகிறது.

இதையெல்லாம் கேட்கும்போது, நாம் பெங்களூரில் இருக்கிறோமா, இல்லை சென்னையில் இருக்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது.

Advertisement

ஒருகாலத்தில் பெங்களூர், மும்பையில் மட்டும்தான் ஒழுங்காக மீட்டர் இயக்குவாங்க. ஆட்டோ ஓட்டுநர்களும் நாகரிகமாக, நேர்மையாக நடந்துகொள்வர். 25 பைசா மிச்சத்தைக்கூட ஆட்டோக்காரர்கள் கொடுத்த காலம் இருந்தது. இப்போது குறைந்தப்பட்சக் கட்டணம் ரூ.17 என்று இருந்தும், மீட்டருக்கு அதிகமாக காசு கொடுன்னு கேட்பது சென்னையை போல பெங்களூரும் மாறுகிறதோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. மீட்டருக்கு சூடு வைப்பது, மீட்டரை இயக்காமல் பணம் கேட்பது, பயணிகளிடம் மரியாதைக் குறைவாகப் பேசுவது... இதெல்லாம் பெங்களூர் ஆட்டோக்காரர்களிடம் புதுசா வந்திருக்கிற பழக்கம்.

இதனால், ஆட்டோவை நினைத்தாலே மனசு கலங்குது என்று விவரிக்கிறார் பெங்களூரில் 40 ஆண்டுகளாகக் குடியிருக்கும் ஸ்டீபன் செல்வராஜ். பெங்களூர் ஆட்டோ ஓட்டுநர்களிடம் காணப்பட்ட தொழில் ஒழுக்கம் காணாமல் போனதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு, ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் கூறும் பதில் இதுதான்.

'பெட்ரோல் விலை உயர்வு, ஆட்டோக்கள் பெருக்கத்தால் பண வரவு குறைந்துள்ளது. இதை ஈடுகட்ட பயணிகளிடம் அதிக பணம் கேட்கிறார்கள். மீட்டருக்கு மேல் பணம் கேட்கும் வழக்கம் பெங்களூர் ஆட்டோக்காரர்களிடம் இதுவரை இல்லாதது. இந்த கலாசாரம் மெல்ல பரவி வருகிறது. ஆபத்தான நிலையை அடைவதற்குள் மாநில அரசு விழித்துக்கொண்டு குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.20 ஆகவும், ஒரு கிலோ மீட்டருக்கான கட்டணத்தை ரூ.10 ஆகவும் உயர்த்த வேண்டும்' என்றார்.

மெட்ரோ ரயில் முழுவீச்சில் இயங்கத் தொடங்கினால், ஆட்டோக்களின் தேவை குறையும் என்று மதிப்பீடுகள் கூறும்நிலையில், புதிதாக 40 ஆயிரம் ஆட்டோக்களுக்கு மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதுவும் மீட்டர் இயக்காமல் பணம் கேட்கும் வழக்கத்துக்கு வழிவகுத்துள்ளது.

இதை முற்றாக மறுக்கிறார் ஆதர்ஷ் ஆட்டோ ஓட்டுநர் சங்கப் பொதுச் செயலாளர் சம்பத். உரிமம் இல்லாத போலி ஆட்டோ ஓட்டுநர்கள் பெருகிவிட்டனர்.

சமூக விரோதிகள் தங்கள் பெயரில் ஆட்டோக்கள் வாங்கி இயக்குகிறார்கள். இவர்கள் தான் பயணிகளிடம் பணம் பறிக்கிறார்கள்.

ஆட்டோக்களில் ஓட்டுநர்களின் விவரங்களை வெளியிடும் திட்டத்தைக் கொண்டுவந்தது எங்கள் சங்கம்தான். ஆனால் ஒரே பெயரில் பலர் உரிமங்களைப் பெற்றுக்கொண்டு ஆட்டோக்களை இயக்குகிறார்கள். ஓட்டுநருக்கான பயிற்சி அளித்த பிறகு உரிமம் வழங்கும் நடைமுறையை அரசு தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும். தவறிழைக்கும் ஆட்டோ மற்றும் ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறக்கூடாது.

சில ஒழுங்குமுறைகளை சீர்குலைக்க எக்காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்கக்கூடாது. மீட்டருக்கு மேல் பணம் கேட்பது தவறு, மீட்டர் இயக்காமல் செல்வது அதைவிட தவறு என்கிறார் அவர். ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் இயக்காமல், அதற்குமேல் பணம் கேட்டாலோ, தரைக்குறைவாகப் பேசினாலோ 080-25588444 அல்லது 080-25588555 என்ற எண்களில் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்போம். ஆட்டோ பதிவு எண் மற்றும் ஆட்டோவில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஓட்டுநர் உரிம எண்ணுடன் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.