பெங்களூரு

காமராஜரின் எளிய வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்குப் பாடம்!

படிக்காத மேதை, ஏழை பங்காளன், கர்மவீரர், பாரத ரத்னா, கிங்மேக்கர் என்று எல்லோராலும் புகழப்படுகின்ற மாசிலாத் தலைவர் காமராஜர் பல்வேறு தொண்டுகள் ஆற்றி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். தமிழக முதலமைச்சராக, அகில இந்திய காங்கிரஸின் தலைவராக, சிறப்பாகப் பணியாற்றிய அவரது ஆட்சிக் காலத்தில்தான் கல்விக்கூடங்கள் அதிகமாகத் திறக்கப்பட்டன. இலவச சீருடை, மதிய உணவுத் திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை உருவாக்கி, அதனைச் செம்மையாகச் செயல்படுத்தினார். காமராஜரின் எளிமையான, புனிதமான வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. தன்னலம் கருதாமல், பொது நலத்தையே தன்னலமாக கருதிய பண்பமை தலைவர் காமராஜர்.

தினமணி

படிக்காத மேதை, ஏழை பங்காளன், கர்மவீரர், பாரத ரத்னா, கிங்மேக்கர் என்று எல்லோராலும் புகழப்படுகின்ற மாசிலாத் தலைவர் காமராஜர் பல்வேறு தொண்டுகள் ஆற்றி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். தமிழக முதலமைச்சராக, அகில இந்திய காங்கிரஸின் தலைவராக, சிறப்பாகப் பணியாற்றிய அவரது ஆட்சிக் காலத்தில்தான் கல்விக்கூடங்கள் அதிகமாகத் திறக்கப்பட்டன. இலவச சீருடை, மதிய உணவுத் திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை உருவாக்கி, அதனைச் செம்மையாகச் செயல்படுத்தினார். காமராஜரின் எளிமையான, புனிதமான வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. தன்னலம் கருதாமல், பொது நலத்தையே தன்னலமாக கருதிய பண்பமை தலைவர் காமராஜர்.

  காமராஜரின் வாழ்க்கையில் மறக்க முடியாத, வரலாற்றில் மறைக்க முடியாத இடம் கர்நாடகம். காங்கிரஸ் கட்சியால் நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல், ராமகிருஷ்ண ஹெக்டே, பி.டி.ஜட்டி, தேவெ கெளடா போன்ற நல்ல நண்பர்களைப் பெற்றிருந்த காமராஜர், அவரது எளிமையான வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்ட பல தமிழ் இளைஞர் படையையும் வைத்திருந்திருந்தார். கர்நாடகத் தமிழர்கள்மீது கள்ளமில்லா அன்பு வைத்திருந்த காமராஜர், கர்நாடகம் வந்தபோதெல்லாம் தமிழ் இளைஞர்களைச் சந்தித்து பேசத் தவறியதேயில்லை.

  அப்படிப்பட்ட அன்றைய இளைஞர்தான் இராசு.மாறன்.

காமராஜருடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் இராசு.மாறன்: என் தந்தையார் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். கர்நாடக மாநிலத்தில் சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட பிரஜா சோசலிசக் கட்சியைச் சார்ந்தவருமான தொழிற்சங்கத் தலைவர் கே.கண்ணுடன் இணைந்து எனது தந்தையாரும் தொழிற் சங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சோசலிசக் கட்சியை இணைக்க முடிவு செய்யப்பட்டு, பெங்களூரில் மெஜஸ்டிக் அருகே முன் அமைந்திருந்த ஏரிக்கரையில் மாஸ்டர் இரணையாவின் நாடகக் கொட்டகையில் இணைப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் எனது தந்தையார் அழைத்துச் சென்றிருந்தார். பள்ளிப் பருவத்தில் இருந்த நான் அன்றுதான் முதன்முதலில் காமராஜரைக் கண்டேன். காமராஜர் கூறிய கருத்துகள் எதுவும் எனக்கு புரியவில்லை என்றாலும், அவரது மீதான ஈர்ப்பு பெருகிறது. 1969-ஆம் ஆண்டில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் பணிகள் நடந்தன.  காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த இளைஞர் காங்கிரஸ் தொடங்கப்பட்டது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக தாரகேசுவரி சின்ஹா நியமிக்கப்பட்டார். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர்களாக கர்நாடகத்தில் எம்.வி.ராஜசேகரனும் (முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பாவின் மருமகன்), தமிழகத்தில் குமரி அனந்தன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். அந்த காலக்கட்டத்தில் பாரதி நகர் இளைஞர்கள் சேர்ந்து, பாரதி நகர் இளைஞர் காங்கிரஸ் தொடங்கி, எம்.வி.ராஜசேகரனிடம் தெரிவித்தபோது மகிழ்ச்சி அடைந்து பெரிதும் பாராட்டினார்,

   இந்த நேரத்தில் பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன.  பெங்களூரு, குமாரகுருபா விருந்தினர் மாளிகையில் காமராஜர் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் தொண்டர்களாகப் பணியாற்றும்படி பாரதி நகர் இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எங்களை எம்.வி.ராஜசேகரன் கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்த குடியரசுத் தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்களாக பணியாற்றும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. குமாரகுருபாவில் தலைவர்கள் குவிந்திருந்தனர். ஒவ்வோர் அறையாகச் சென்று பார்த்தபோது, நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய், சவாண், பாபு ஜெகஜீவன்ராம், பக்தவத்சலம் போன்ற தலைவர்கள் இருந்தனர்.

  ஓர் அறையில் காமராஜர் தலைவர்களுடன் ஏதோ ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அந்த அறையை நாங்கள் ஒவ்வொருவராக எட்டிப் பார்த்தோம். இதை கவனித்த காமராஜர் வாசலுக்கு வந்த யார் நீங்கள் என்ன வேண்டும் என்று கேட்டார். தொண்டர் பணிக்காக வந்திருக்கிறோம் என்று கூறியதும், எங்களை உள்ளே அழைத்து அமர வைத்துப் பேசினார். பாரதி நகர் வெங்கடேசன், மு.முனுசாமி (பின்னர் சட்டப்பேரவை உறுப்பினரானார்), மா.நடராஜன், குருநாதன், தங்கவேலுவுடன் என்னையும் சேர்ந்து 6 பேர் இருந்தோம்.   ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்த காமராஜர், மாணவர்களாக இருந்தவர்களிடம் நல்லா படிக்கணும்னேன், வேலை செய்வோரிடம் அப்பா, அம்மா நல்லா காப்பாத்தும்னேன் என்று அறிவுறுத்திவிட்டு, எங்களை வழியனுப்பி வைத்தார்.

  இந்திய நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராக யாரை நியமிப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் சாதாரண தொண்டர்களாகிய எங்களைச் சந்தித்து காமராஜர் பேசிய விதம் குறித்து இன்றைக்கும் நினைத்தாலும் மெய் சிலிர்க்கும், மனம் குளிரும். என் வாழ்நாள் முழுவதும் எனக்கிருக்கும் ஒரே தலைவர் காமராஜர்தான் என்று இந்த நிகழ்ச்சியில் தான் தீர்மானித்தேன் என்றார் அவர்.

கல்விக் கண் திறந்தவர்

ராஜாஜி கொண்டுவந்த குலக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6000 பள்ளிகள் மூடப்பட்டன. காமராஜர் 13.4.1954-இல் முதல்வர் பொறுப்பேற்றவுடன், அவற்றை மீண்டும் திறக்க ஆணை பிறப்பித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 14 வயதுடைய பிள்ளைகளுக்கு கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்து, அதற்கு டாக்டர் அழகப்பச் செட்டியார் தலைமையில் ஒரு குழு அமைத்தார்.

  அக் குழுவின் அறிக்கையின்படி, 500 மக்கள்தொகை கொண்ட கிராமத்துக்கு ஒரு பள்ளி என நடவடிக்கை எடுத்து, 1954-55ஆம் ஆண்டில் 12,967 பள்ளிகளையும், 1961-62-இல் மேலும் 12,267 கூடுதல் பள்ளிகளையும் தொடங்கினார். அவர் கொண்டு வந்த கல்வித் திட்டத்தால் கல்விக்கண் பெற்ற பலர், தமிழகத்தின் வரலாற்று நாயகர்களாக மலர்ந்திருக்கிறார்கள்.

எளிமைச் சுடர்

மடிக்கேரியில் ஒரு கூட்டம். லால் பகதூர் சாஸ்திரியுடன் காமராஜரும் கூட்டத்தில் பேசுகிறார். அக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற காமராஜருக்கு அரசு விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பாரதிய வித்யாபவன் நிர்வாகியாக விளங்கிய மத்தூர் கிருஷ்ணமூர்த்தி, காமராஜரின் தமிழ் பேச்சை மொழிபெயர்க்க அவருடன் தங்கியிருக்கிறார். வெளியூர்களுக்குச் செல்லும்போது தனது ஆடைகளை தானே துவைத்துக் கொள்வதை காமராஜர் வழக்கமாக கொண்டிருந்தாராம். ஆடையை துவைக்கும் வாய்ப்பை தனக்கு தரும்படி காமராஜரிடம் மத்தூர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார். முதலில் மறுத்த காமராஜர், கிருஷ்ணமூர்த்தியின் வற்புறுத்தலால் சம்மதித்துள்ளார்.

  ஆடையைத் துவைத்து அவற்றை இஸ்திரி செய்தபோது, காமராஜரின் துண்டு ஒன்றரை அங்குலம் அளவுக்கு கிழிந்துள்ளதைக் கவனித்த மத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அங்கே வந்த காமராஜரிடம், அய்யா ஆடை கிழிந்துள்ளது. ஓய்வு கிடைக்கும்போது காதி பவனுக்கு சென்று ஒரு கஜம் ஆடை வாங்கிவருகிறேன் என்று கூறியுள்ளார். அதை சற்றும் பொருள்படுத்தாத காமராஜர், "என்னப்பா இந்த கிழிசலையாக சொல்றே. நெறய கிழிஞ்சி இருக்கிற துணிகூட இல்லாம நம்ம நாட்டுல நிறைய பேர் இருக்காங்க. இதபோயி மாத்தணும்னு சொல்றியே, பூரா கிழியட்டும் பார்க்கலாம்ண்னேன்' என்று கூறினார்.

இதை கேட்டு நிலை குலைந்துபோன மத்தூர் கிருஷ்ணமூர்த்தி, இப்படிப்பட்ட தலைவரும் நம் நாட்டில் இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டபோது அவரது கண்கள் கண்ணீர் குளமாகியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT