பெங்களூரு

தசரா திருவிழாவில் பங்கேற்க யானைகள் மைசூருக்குப் பயணம்

DIN

தசரா திருவிழாவில் பங்கேற்பதற்காக, நாகரஹொளே காட்டில் இருந்து யானைகள் மைசூருக்கு புறப்பட்டன.
உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா 405-ஆம் ஆண்டாக வரும் செப்.21 முதல் 30-ஆம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தசரா விழாவின் இறுதிநாளான செப்.30-ஆம் தேதி யானை ஊர்வலம் இடம்பெறும். யானை அர்ஜுனா, 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை சுமந்துகொண்டு ஊர்வலத்தை வழிநடத்திச் செல்லும். இதை பின்தொடர்ந்து பல யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்கும். இந்தக் காட்சியைக் காண உலகின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் குவிந்திருப்பார்கள்.
தசரா திருவிழாவில் வழக்கமாக பங்கேற்கும் யானைகளான அர்ஜுனா, பலராமா, அபிமன்யூ, கஜேந்திரா, காவிரி, விஜயா, முதல்முறையாக கலந்துகொள்ளும் வரலட்சுமி, பீமா ஆகிய 8 யானைகள் சனிக்கிழமை மைசூருக்கு புறப்பட்டன.
மைசூரு மாவட்டம், ஹுனசூர் வட்டம், நாகரஹொளே புலிகள் சரணாலயத்தில் உள்ள குருபுர கிராமத்தின் வனப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற உற்சாகமான விழாவில் பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா சிறப்பு பூஜை செய்து பூமாரி பொழிந்து யானைகளை வழியனுப்பி வைத்தார்.
விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பி.புஷ்பா அமர்நாத், மைசூரு மாநகராட்சி மேயர் பைரப்பா, துணை மேயர் வனிதா, மண்டல ஆணையர் ஏ.எம்.குன்சப்பா, மாவட்ட ஆட்சியர் டி.ரந்தீப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரமாசுப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அழகிய, வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளுக்கு வெல்லம், தேங்காய், கரும்பு உள்ளிட்ட தின்பண்டங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மேளதாளங்களுடன் யானைகள் வழியனுப்பி வைக்கப்பட்டன. லாரியில் பயணம் மேற்கொள்ளும் யானைகள், மைசூரு வட்டம், இலவாலயா கிராமத்தின் அருகே அலோகா அரண்மனை வளாகத்தில் 5 நாள்கள் தங்க வைக்கப்படுகின்றன. 5 நாள்களுக்கு பிறகு ஆக.17-ஆம் தேதி 8 யானைகளும் மைசூருக்கு அழைத்துச் செல்லப்படும்.
மைசூரில் ஆக.17-ஆம் தேதி வன மாளிகையில் நடைபெறும் விழாவில் பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் யானைகளை வரவேற்கிறார்கள். பின்னர் அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் யானைகள் தங்கவைக்கப்படுகின்றன. தசரா திருவிழா முடிந்த பிறகு, யானைகள் மீண்டும் காடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT