முகப்பு
பெங்களூரு

இன்னும் 15 நாள்களுக்குள் கர்நாடகத்தில் ரியல் எஸ்டேட் சட்ட மசோதா அமல்: வெங்கய்ய நாயுடு

ரியல் எஸ்டேட் சட்ட மசோதா, கர்நாடகத்தில் 15 நாள்களில் அமல்படுத்தப்படும் என்றார் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

Updated On : 3 மே, 2017 at 8:53 AM
பகிர்:

ரியல் எஸ்டேட் சட்ட மசோதா, கர்நாடகத்தில் 15 நாள்களில் அமல்படுத்தப்படும் என்றார் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பொலிவுறு நகரம், வீட்டுவசதி, தூய்மை இந்தியா திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 தேசிய அளவில் திங்கள்கிழமை முதல் ரியல் எஸ்டேட் சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மோசடியில் ஈடுபடும் ஒருசில ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடப்படும்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ரியல் எஸ்டேட் சட்ட மசோதாவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. வாடிக்கையாளர்களிடம் கூறிய அனைத்து வசதிகளையும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செய்து தர வேண்டும்.

Advertisement

அவர்கள் கூறிய வசதிகளை செய்து தராத ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரியல் எஸ்டேட் சட்ட மசோதாவை 14 மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன.

கர்நாடகத்தில் இந்த சட்ட மசோதாவை அமல்படுத்த கால அவகாசம் கேட்டுக் கொண்டுள்ளது. 15 நாள்களுக்குப் பிறகு கர்நாடகத்தில் ரியல் எஸ்டேட் சட்ட மசோதா அமல்படுத்தப்படும்.

பொலிவுறு நகரம் திட்டத்தில் பெங்களூரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே மாநிலத்தில் தும்கூரு, தாவணகெரே, பெலகாவி, ஹுப்பள்ளி, தார்வாட், மங்களூரு, உடுப்பி ஆகிய 6 நகரங்கள் பொலிவுறு நகரத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் மெட்ரோ ரயில் பாதையின் முதல் கட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. சிக்பேட்டை ரயில் நிலையத்தில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை முதல் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

பெலகாவி, ஹுப்பள்ளி ஆகிய நகரங்களில் குப்பையிலிருந்து மின்சார உற்பத்தி பிரிவுகள் தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

பேட்டியின் போது, அமைச்சர்கள் ரோஷன்பெய்க், எம்.கிருஷ்ணப்பா, ஈஸ்வர் கண்டரே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.