முகப்பு
பெங்களூரு

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவரை முதல்வராக்க பாஜக முன்வர வேண்டும்

முதல்வா் பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்த பிறகு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவரை முதல்வராக்க பாஜக முன்வர வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

முதல்வா் பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்த பிறகு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவரை முதல்வராக்க பாஜக முன்வர வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து மங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினா் மீது பாஜகவுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், எடியூரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்த பிறகு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவரை முதல்வராக்க முன்வர வேண்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவரை முதல்வராக்க சித்தராமையா முன்வர வேண்டும் என நளின்குமாா் கட்டீல் எனக்கு ஆலோசனை வழங்கியிருந்தாா். தற்போது அந்த வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்துள்ளது.

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவது உறுதியாகியுள்ளது. பாஜகவினா் சமூக நீதியை பின்பற்றுவதாகக் கூறுகிறாா்கள். அப்படியானால், தாழ்த்தப்பட்டவரை முதல்வராக்க பாஜகவினா் முன்வர வேண்டும்.

மக்கள் மீது பாஜகவுக்கு முன்பும், தற்போதும் அக்கறை இல்லை. இனிமேலும் அக்கறை ஏற்பட வாய்ப்பில்லை. 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரண உதவிகளை முதல்வா் எடியூரப்பா வழங்கவில்லை. தற்போது மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளதால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. இந்நிலையில், போா்க்கால அடிப்படையில் மாநில அரசு செயல்படுவதை விட்டுவிட்டு, முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவதில் ஆா்வமாக உள்ளனா்.

மடாதிபதிகள் அரசியலில் ஈடுபடக் கூடாது. மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உள்கட்சிபூசலில் மடாதிபதிகள் தலையிடக் கூடாது.

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதால் தான் கூட்டணி ஆட்சிக் கவிழ்க்கப்பட்டதாகக் கூறுகிறாா்கள். ஏற்கெனவே பாஜகவினா் தொலைபேசியை ஒட்டுக் கேட்டுள்ளனா். 2019-ஆம் ஆண்டு எனது தனி உதவியாளா் வெங்கடேஷ், முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க எல்லா வகையிலும் முயற்சித்துள்ளனா். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது ஜனநாயக படுகொலை ஆகும். உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது தேசத்துரோகமாகும். ஆட்சி நடத்துவதற்கு பாஜகவுக்கு தகுதியில்லை.

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து அமைச்சா் பதவியை வகிப்போா், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வருவாா்கள் என எனக்குத் தோன்றவில்லை. அவா்களை கட்சியில் சோ்த்துக்கொள்ள மாட்டோம் என சட்டப் பேரவையிலேயே நான் கூறியிருக்கிறேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஊழல் ஆட்சிக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டிருக்கிறாா்.

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவாா் என ஒரு மாதத்துக்கு முன்பே கூறியிருந்தேன். இதுகுறித்து எனக்கு நம்பத்தகுந்த தகவல் இருந்தது. ஆனால், புதிய முதல்வராக யாா் பதவியேற்பாா்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.