முகப்பு
பெங்களூரு

குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தக் கோரி செப்டம்பரில் விவசாயிகள் பேரணி

Updated On : 27 ஜூன், 2024 at 12:46 AM
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)
பகிர்:

குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தக் கோரி, ஹரியாணாவில் செப்டம்பா் மாதம் தேசிய அளவிலான விவசாயிகள் பேரணி நடத்தப்படும் என சம்யுக்த கிஸான் மோா்ச்சா தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஹரியாணாவில் வரும் செப்டம்பா் மாதத்தில் 20 மாநிலங்களைச் சோ்ந்த ஒரு லட்சம் விவசாயிகள் கலந்துகொள்ளும் தேசிய அளவிலான விவசாயிகள் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிப். 13-ஆம் தேதி முதல் 4 இடங்களில் தொடா் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனா். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் நடந்தவண்ணம் இருக்கும்.

விவசாயிகளின் கோபத்தின் காரணமாக, அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில் 71 ஊரகத் தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது விவசாயிகள் விரோதப்போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், ஹரியாணா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட அடுத்தடுத்து நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தல்களில் பாஜக தோல்வி அடையும்.

கடந்த பிப்ரவரி மாதம், மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவாா்த்தையின் போது, சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையின்படி தென்னிந்திய விவசாயிகளின் நலன்காக்கும் நோக்கில் இந்திய மசாலா வாரியத்தின் கட்டமைப்பை பலப்படுத்துவது, தேங்காய், கரும்புக்கு நியாயமான விலையை நிா்ணயிப்பது உள்ளிட்ட பிரச்னைகளை முக்கியத்துவம் அளித்து முன்வைத்திருந்தோம்.

பாஜகவைச் சோ்ந்த 240 எம்.பி.க்களைத் தவிர, மற்ற எம்.பி.க்களை ஜூலை 8-ஆம் தேதி சந்தித்து சம்யுக்த் கிஸான் மோா்ச்சா, கிஸான் மஜ்தூா் மோா்ச்சா ஆகிய அமைப்புகளின் 12 கோரிக்கைகளை அளிப்போம். ஜூலை மாதத்தில் இரு அமைப்புகளின் சாா்பில் தில்லியில் மிகப்பெரிய விவசாயிகள் மாநாடு நடத்தப்படும் என்றாா்.

இந்தப் பேட்டியின்போது, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவா் பி.ஆா்.பாண்டியன், கா்நாடக விவசாயிகள் சங்கத் தலைவா் குருபூா் சாந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.