"காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் சித்தராமையாவே முதல்வர்'
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், சித்தராமையாவே மீண்டும் முதல்வர் ஆவார் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், சித்தராமையாவே மீண்டும் முதல்வர் ஆவார் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறியது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும்கட்சிக்கு எதிரான அலை மக்களிடம் இல்லை. முதல்வர் சித்தராமையா தலைமையை மக்கள் ஏற்றுகொண்டுள்ளனர். எனவே அவரது தலைமையில் தேர்தலை எதிர்கொண்டு வருகிறோம். மக்கள் விரும்பும் தலைவராக சித்தராமையா உள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மீண்டும் சித்தராமையா முதல்வர் ஆவார். கடந்த 5 ஆண்டுகளில் சித்தராமையா சிறப்பாக ஆட்சி செய்துள்ளார். இதனால் அடுத்த முறையும் அவரை முதல்வர் ஆக்க முடிவு செய்துள்ளோம். எனக்கும் (ராகுல்), சித்தராமையாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு சிறப்பாக உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் பல்வேறு தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும் மக்கள் சித்தராமையா தலைமையிலான ஆட்சியை விரும்புகின்றனர். இதனால் மீண்டும் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி சித்தராமையா தலைமையில் ஆட்சியை பிடிப்பது உறுதி.
2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். அண்மைக்காலமாக பிரதமர் பதவிக்குத் தகுதியில்லாதவர் என்பதனை நரேந்திர மோடி நிரூபித்து வருகிறார்.
குஜராத்தின் முதல்வராக அவர் பணியாற்றியதற்கும், பிரதமராகப் பணியாற்றி வருவதிலும் வித்தியாசத்தைக் காட்டி வருகிறார். மோடி பிரதமரான பிறகு விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை அவர்கள் கொண்டுள்ளனர்.
2014-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் பின் தங்கிவிட்டது. குறிப்பாக பிரசாரத்தில் அதிகம் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டோம். இதனால் அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவ நேரிட்டது. தற்போது மக்கள் காங்கிரஸ் ஆட்சியையும், பாஜக ஆட்சியையும் எடை போட்டு பார்க்கின்றனர். இதில் காங்கிரஸ் ஆட்சியே சிறப்பானது என்று கருதுவதால், வரும் தேர்தலில் பாஜகவை தோல்வி அடையச் செய்து, காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய முடிவு செய்துள்ளனர் என்றார் ராகுல் காந்தி.
பேட்டியின்போது முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.